Homeஆன்மீகம்தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

திருவண்ணாமலை தீப விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும்¸ சாமி வீதி உலா நடைபெறவும் அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஒருநாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காலையில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வந்த தங்க ரத தேரினை இழுத்து தொடங்கி வைத்து¸ ஓதுவார் பயிற்சி பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து¸ பார்வையிட்டார். திருக்கோயில் அலுவலக வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றினை நட்டு வைத்தார். திருக்கோயிலில் மருத்துவ முதலுதவி மையத்தினை தொடங்கி ஆய்வு செய்தார். 

தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?
தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உள்ளுர் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்கவில்லை. பகுத்தறிவை பின்பற்றுவதால் கோயிலுக்குள் செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்திருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர். 

கோயில் நிகழ்ச்சிகள் முடிந்ததும் அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு¸ திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய லிங்க மைதானம் அருகில் இந்து சமயம் அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை குத்துவிளக்கேற்றி¸ கல்வெட்டினை திறந்து வைத்து பக்தர்கள் தங்கும் விடுதியினை பார்வையிட்டு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பிறகு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கட்டப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்தின் கட்டடப் பணியினையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு¸ கோவில் கிரிவலப்பாதை¸ கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் 2 அமைச்சர்களும் கலந்து கொண்டனர். முதலில் வெளியான அமைச்சர் சேகர்பாபுவின் பயண விவரத்தில் தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த நிகழ்ச்சி இடம் பெறவில்லை. இது சம்பந்தமாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தீபவிழா சம்மந்தமான ஆய்வு நடைபெறும் என அவரது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தில் அது சம்மந்தமான ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை. 

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது¸

95 சதவீத மக்கள் ஆன்மீகத்தை நேசிக்கின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை. கோயில் இல்லை என்றால் திருவண்ணாமலை புகழ் பெற்றிருக்காது. திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வாங்கித் தர வேண்டும்¸ கோயில் கடைகளின் வரிகளை குறைக்க வேண்டும். தீபம் முடிந்து தெப்பல் விழா நடைபெறும் அய்யங்குளத்தை தூர்வார வேண்டும். காலியாக உள்ள பதினாறு கால் மண்டபத்தை சுற்றிலும் கடைகள் வைக்க அனுமதி அளித்து நடுவில் முக்கிய பிரமுகர்களின் கார் நிறுத்துவதற்கு வசதி செய்து தரவேண்டும். பழனி பஞ்சாமிர்தத்திற்கு  பேமஸ். அதேபோல் திருப்பதியில் லட்டு பேமஸ் இந்த வரிசையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புளியோதரை¸ கற்கண்டை பேமஸ் ஆக்கிட வேண்டும். 

ஓம் நமச்சிவாயா என்ற மந்திரம் ஒலிக்க செய்ய வேண்டும். அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்களின் வசதிக்காக கழிவறையை ஏற்படுத்த வேண்டும். சக்கரத்தான் மடை சதுர்வேதி நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த 11 லட்சத்து 30 ரூபாய் கடந்த 2010ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி வந்து சேரவில்லை. எனவே நிதி ஒதுக்கி கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி¸ சிற்பக் கல்லூரி இசைக்கல்லூரி¸ வேதபாடசாலை ஆரம்பித்து அவைகளை ஒன்றாகி பல்கலைக் கழகமாக்கிட வேண்டும். 

அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

அவர் பேசியதாவது

தீபத் திருவிழா நடத்தப்பட்டதற்காக 2 கோடியே 10 லட்சம் பாக்கி இருப்பதாக தெரிவித்தனர். இனி தீபத்திருவிழா செலவுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். சாலைப் பணிகளுக்கான செலவையும் இந்து சமய அறநிலையத் துறையே ஏற்றுக்கொள்ளும். கிரிவலப்பாதையில் மின் விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தையும் இந்து சமய அறநிலைத்துறை ஏற்றுக் கொள்ளும். 

கடை வாடகை கோயிலுக்கு வந்தால் தான் இந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்திட முடியும். வாடகை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ 84 கோடியில் 48 பணிகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருத்தேர் பாதுகாப்பு என்பது இல்லாமல் உள்ளது. தேர்களை பாதுகாக்க ரூ 10 கோடியில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இந்த நிலை இருக்கிறது. எனவே உடனடியாக தேர்களை பாதுகாக்க இணை ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் பேசியவர்கள் தீபத் திருவிழாவின்போது பதினோரு நாட்கள் மலைமீது ஏறி தீபம் ஏற்றும் சூழ்நிலை உள்ளது. இதற்காக செல்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை  முன்வைத்தனர்.

தீப விழாவில் சாமி வீதி உலா¸ பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

கூட்டம் முடிந்ததும் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது¸  

இந்து சமய அறநிலைத்துறை பொருத்தளவில் கடந்த காலங்களை விட இந்த காலத்தில்தான்  சட்டமன்றத்தில் 112 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தோம். அந்த 112 அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பார்த்தால் 20 ஆயிரம் பணிகள் இருக்கும். அந்த 20 ஆயிரம் பணிகளை முழுமையடைச் செய்தால் பல கோடி மக்களுக்கு நன்மை கிடைக்கும். அதனால் அந்த நன்மையை இறையன்பர்களுக்கு  கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறிய அறிவுரையின் படி தினந்தோறும் இந்து சமய அறநிலையத்துறைக்குண்டான இறையன்பர்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியோடு மனநிறைவோடு எங்கள் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

இறையன்பர்களின் மகிழ்ச்சி என்பது இந்த ஆட்சியாளர்களின் மகிழ்ச்சி. தமிழக முதல்வரின் மகிழ்ச்சி. நானும் 25 ஆண்டுகளாக தீபத்திருவிழாவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இது கொரோனா கால கட்டம் என்பதால் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் ஆராய்ந்த பிறகுதான் கார்த்திகை தீபத்திருவிழா குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். அண்டை மாநிலத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பக்ரீத்துக்கும்¸ ஒணத்திற்கும் கேரள மாநிலத்தில் முழுமையாக திருவிழாவுக்கு அனுமதி அளித்ததால் இன்றைய அளவில்கூட பத்தாயிரத்திற்கும் அதிகமான நோய் தொற்றுகள். தினம்தோறும் அவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. 

இருந்தாலும் தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் 36 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா நோய் தொற்று என்பது இப்போது 1100¸ 1200 என்று உள்ளது. மாவட்ட ஆட்சியர் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் போது தினம்தோறும் 25 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று கூறியிருக்கின்றார்.

இந்த நோய் தொற்றின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை கணக்கீட்டு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாங்களும் கலந்து பேசுவோம். தமிழக முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில் முழுமையாக மூடி இருந்த நிலையை மாற்றி நான்கு நாட்களுக்கு வாரத்திலே தரிசனம் என்றார். அதன் பிறகு வாரத்தில் ஏழு நாட்களும் தரிசனத்துக்கு அனுமதித்தார். அதை தொடர்ந்து திருக்கோயிலில் இருக்கின்ற 65 தங்கத் தேர்களும்¸ 49 ஒன்பது வெள்ளி தேர்களும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்திருக்கிறார். பக்தர்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

அந்த வகையிலே கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருக்காத நிலை என்று வருகின்றபோது திருவிழாக்களுக்கும் நிச்சயம் தமிழக முதலமைச்சர் பக்தர்களுடைய¸ இறையன்பர்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்ப்பார். 

இந்த திருக்கோயிலுக்கு உண்டான முழு திட்ட வரைபடம் தயாரிக்க முதலமைச்சர் உத்தரவு (மாஸ்டர் பிளான்) பிறப்பித்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அந்த திட்டவரைவு தயாரிப்பு பணி நிறைவு பெற்றவுடன் மாவட்ட அமைச்சரோடு முதல்கட்ட ஆய்வு செய்து முடித்து அதன்பிறகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி செய்யப்பட்ட பிறகு பக்தர்களுக்கு தங்கும் வசதி¸ அவர்களுடைய வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி¸ இயற்கை உபாதைகளை கழிக்க வசதி¸ பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஏற்படுத்தப்படும் 

கோயிலுக்கு அறங்காவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். கிரிவலப் பாதையை சுற்றி தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ரூ.15 கோடி திட்ட மதிப்பீட்டில் கிரிவலப் பாதையை செப்பனிடுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இதே போல் ஒரு பத்திரிகையாளர் நிகழ்ச்சி நடைபெறும் என்றால் நீங்களே புருவத்தை உயர்த்துகிற அளவிற்கு திருவண்ணாமலையாருக்கு வளர்ச்சி பணிகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவோம். 

கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தி 12 வருடங்கள் முடித்திருந்தால் அஷ்டலிங்த்திற்கும் திருப்பணிகள் நடைபெறும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 

கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி¸ இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்¸  மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் மற்றும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

See also  திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!