Homeசெய்திகள்பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் நீதி கேட்டு போராட்டம்

பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் நீதி கேட்டு போராட்டம்

பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் நீதி கேட்டு போராட்டம்

கந்துவட்டி கும்பலிடமிருந்து வீடு மற்றும் நிலத்தை மீட்டு தருமாறு பெற்றோரை இழந்த குழந்தைகள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் வசித்தபவர் மூர்த்தி. விவசாயி. இவருக்கும்¸ ஆரணி பள்ளிகூடத் தெருவை சேர்ந்த ஏழுமலை மகள் கலைசெல்விக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யோகேஸ்வரி (16)¸ ஹேமமாலினி (9) என்ற மகள்களும்¸ கவுரிசங்கர்(7) என்ற மகனும் உள்ளனர். 

மூர்த்திக்கு பூர்வீக சொத்தாக ஆகாரம் கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீடு இருந்தது. இவற்றை கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த துரைபாபு என்பரிடம் அடமானம் வைத்து பணத்தை வாங்கியுள்ளார்¸ கொடுத்த பணத்திற்கு வட்டி கேட்டு கடன் கொடுத்தவர் மூர்த்தியை மிரட்டியுள்ளார்¸ இதுசம்மந்தமாக மூர்த்திக்கும்¸ கலைசெல்விக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

கடந்த 8ம் தேதி கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி சுத்தியலை கொண்டு மூர்த்தி¸ கலைச்செல்வியின் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மனைவி இறந்த பயத்தில் மூர்த்தி¸ நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது சம்மந்தமாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது போலீசார்¸ நிலத்தையும்¸ வீட்டையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். நிர்கதியாக விடப்பட்ட மூர்த்தியின் 3 பிள்ளைகளும் பாட்டியின் அரவணைப்பில் இருந்து வருகின்றனர். 

பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் நீதி கேட்டு போராட்டம்

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு யோகேஸ்வரி¸ ஹேமமாலினி¸ கவுரிசங்கர் ஆகியோர் தங்களது பாட்டியுடன் ‘நீதி வேண்டும்” என்ற பேனருடன் வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு அவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். 

இது குறித்து 11ம் வகுப்பு படித்து வரும் யோகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ 

தந்தையின் நிலம் மற்றும் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து எனது தாத்தா ஏழுமலை ரூ.4.50 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அசல் தொகைக்கும் கூடுதலாக வட்டி செலுத்தி உள்ளனர். அதேநேரத்தில் கடன் கொடுத்தவர்கள்¸ எங்களது வீடு மற்றும் நிலத்தை கிரையம் செய்துள்ளாக கூறுகின்றனர். எனது தந்தையை ஏமாற்றி கிரையம் செய்துள்ளனர். என் தந்தை யாரிடமும் கடன் வாங்கவில்லை. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு¸ எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது தந்தையின் நிலம் மற்றும் வீட்டை மாவட்ட ஆட்சியர் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும்¸ இதனை நம்பிதான் எங்களது கல்வி மற்றும் எதிர்காலம் உள்ளது. கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த எங்களது பெற்றோரின் மரணத்துக்கு நீதி வேண்டும். மேலும் எங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

அவர்கள் வந்த நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியில் ஆய்வு பணிக்கு சென்று விட்டார். மாவட்ட வருவாய் அதிகாரி மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க மாலை 5 மணி வரை சிறுமிகளும்¸ சிறுவர்களும் அங்கேயே காத்திருந்தனர். அதன் பிறகு வந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்தனர்.

இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். 

கந்துவட்டி பிரச்சனையில் தாய்- தந்தையை இழந்த பிள்ளைகள் நீதி கேட்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

See also  ஜியோ செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!