ஏரி நீர் வரத்து கால்வாய்களை ஆய்வு செய்த போது கலெக்டருடன் வாக்குவாதம் செய்த விவசாயியை போலீசார் வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஏரி, சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகிய பகுதிகளில் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று ஆய்வு செய்தார்.
வீடுகள் மூழ்கியது
கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையினால் வேங்கிக்கால், சேரியந்தல், நொச்சிமலை, கீழ்நாத்தூர் ஆகிய ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 2 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. பல பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர் வீடுகளிலும், தெரிந்தவர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது.
பார்க்க…
https://www.agnimurasu.com/2021/10/blog-post_96.html
https://www.agnimurasu.com/2021/10/blog-post_16.html
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, நீர் போகும் வழியை மடக்கி அறிவியல் பூங்கா கட்டப்பட்டு இருப்பதே இந்த அளவிற்கு தண்ணீர் வருவதற்கு காரணம் என கூறி தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக பாலங்கள், கால்வாய்களை கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரூ.8 கோடியில் திட்டம்
இதையடுத்து வேங்கிக்கால் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் உபரிநீர் தங்கு தடையின்றி சேரியந்தல், நொச்சிமலை, ஏந்தல் ஊராட்சிக்குட்பட்ட கொம்பனேரி உள்ளிட்ட 4 ஏரிகள் வழியாக ஓலையாறு சென்றடைய திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலை துறை மூலம் வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஒரு சிறுபாலம் 2 கல்வெட்டு அவலூர்பேட்டை சாலையில் 4 கல்வெட்டு திண்டிவனம் சாலையில் 4 கல்வெட்டு என மொத்தம் 10 கல்வெட்டுகள் மற்றும் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணி ரூ.8 கோடி மதிப்பிட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு போன்று இந்த ஆண்டு ஏற்படாத வகையில் பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வாக்குவாதம்
சேரியந்தல் ஏரியிலிருந்து நொச்சிமலை ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அந்த கால்வாய் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் கால்வாயில் மழைநீர் சென்றால் பரவாயில்லை, கழிவு நீரும் சேர்ந்து செல்கிறது. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, இதை தடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம் என கலெக்டரிடம் கூறினார். இதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் கால்வாய் அமைத்து வருகிறோம், உங்கள் நிலத்தின் நடுவிலா கால்வாய் போகிறது?, ஓரம் தானே செல்கிறது என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த விவசாயி, வாக்குவாதம் செய்யவே அவரை அழைத்துச் செல்லும்படி போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கலெக்டருடன் வந்த அதிரடிப்படையினர் அந்த விவசாயியை போலீஸ் வேனில் ஏற்றி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அந்த விவசாயிக்கு போலீசார் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தினால் அவலூர்பேட்டை ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ஏரி உபரி நீர், ஓலையாறை சென்று அடைய ரூ.8 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டம், கால்வாய் மற்றும் ஓடை அக்கிரமிப்புகளை துணிந்து அகற்றினால் மட்டுமே வெற்றி பெறும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேங்கிக்கால் பகுதி, நொச்சிமலை பகுதிகளில் உள்ள ஓடை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே தங்கு தடையின்றி உபரி நீர் செல்ல வழிவகை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் உத்தரவு
நொச்சிமலையில் கலெக்டர் ஆய்வு செய்த போது அங்கிருந்து உபரி நீர் கீழ்நாத்தூர் ஏரிக்கு செல்வதற்கான பாதை ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நொச்சிமலை ஊராட்சி மன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றி தனக்கு அனுப்பி வைக்கும்படி ஊராட்சி மன்ற தலைவருக்கும், அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
கலெக்டருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் க.முரளி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர் கு.ரகுராமன், உதவி பொறியாளர். ஆ.கலைமணி, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள் சுசீந்திரன், ராஜாராம், வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ் ஆனந்த், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.