விளையாட்டு மைதானம் உருவானால் மருத்துவமனை இருக்காது -அமைச்சர்
விளையாட்டு குறைந்ததால் மருத்துவமனை அதிகரித்துவிட்டது, மைதானம் உருவானால் மருத்துவமனை இருக்காது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கூறினார்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் 36வது மாநில இளையோர் தடகள போட்டி 4 நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில தடகள சங்க செயலாளர் சி.லதா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தடகள சங்கத்தின் கொடியினை ஏற்றி வைக்க தடகள போட்டிக்கான ஜோதியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஏற்றிவைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளையோர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பிறகு மாநில அளவிலான தடகள போட்டியினை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது,
திருவண்ணாமலையில் உள்ள விளையாட்டு அரங்கை கம்பனும், கலெக்டரும் சிறப்பாக உருவாக்கி உள்ளனர். விளையாட்டு என்பது பதக்கம் பெற மட்டுமல்ல உடல் உறுதிக்காகவும் நாம் விளையாட வேண்டும். அத்தனை பேரும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இன்றைக்கு நாடெங்கிலும் மருத்துவமனைகள் அதிகரித்துவிட்டது. வீதிகள் தோறும் மருத்துவமனைகள் உள்ளன. கடந்த காலத்தில் எங்குமே மருத்துவமனையில் இல்லை. ஆனால் வீதிகளில் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஏதோ ஒரு விளையாட்டை விளையாடி கொண்டு இருந்தோம். இன்றைக்கு விளையாட்டு குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகள் அதிகரித்து விட்டது. ஒரு ஊரில் மருத்துவமனையை மூட வேண்டும் என்றால் அந்த ஊரில் விளையாட்டு மைதானம் இருந்தால் போதும் என்ற நிலை மாறி உள்ளது.
கொரோனா 2வது அலையில் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்த காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் அப்போதுதான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வந்தது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற 15 மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு துறையில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் 1330 பேர்களுக்கு ரூ 36 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த மாநிலத்திலும் இல்லை.
விளையாட்டு துறைக்கு தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்ற இரண்டு உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பித்திருக்கிறார். இதைப் பின்பற்றி வருகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 7 தங்க பதக்கம், 6 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் என 18 பதக்கங்களை பெற்று தந்தவர்கள் இந்த தடகள வீரர்கள். அதனால் தமிழகம் இந்தியாவிலேயே 5 வது இடத்தை பெற முடிந்தது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் மாற வேண்டும் என்பது முதலமைச்சரின் கனவு. இந்த கனவை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அ.பாலமுருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட தடகள சங்க துணை செயலாளர் வடிவேலன் நன்றி கூறினார்.
4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தில் 36 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.