தண்டராம்பட்டில் திமுக சேர்மன் வெற்றி பெற அதிமுகவினர் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிஞ்சாபுரத்தில் பாமக ஆதரவுடன் திமுக சுலபமாக வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு¸ பெரணமல்லூர்¸ துரிஞ்சாபுரம் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகளால் இந்த தேர்தல் ஒன்றரை வருடங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. தேர்தலை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி இன்று தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 4 ஒன்றிய தலைவர் பதவிகளையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. செய்யாறு ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவராக திமுக கவுன்சிலர் பாபு தேர்வு செய்யப்பட்டார். அவர் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த லட்சுமி லலிதா ராமன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4கவுன்சிலர்களும்¸ அதிமுக¸ தே.மு.தி.க¸ அமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும் உள்ளனர். ஒருவர் சுயேச்சை ஆவார். இந்நிலையில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கோதண்டராமன் 5 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அங்கு திமுகவிற்கு 9 கவுன்சிலர்கள் இருந்த நிலையில் இரண்டு பேர் கட்சி மாறி திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமயந்தி ஏழுமலை 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முனியம்மாள் 6 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
மொத்தம் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் கொண்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில்¸திமுகவிற்கு 8 கவுன்சிலர்களும்¸ அதிமுகவிற்கு 3 கவுன்சிலர்களும்¸ பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 கவுன்சிலர்களும் உள்ளனர். இது தவிர 3 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். தலைமை சீட் தராததால் சுயேச்சையாக போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகனின் தாயார் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஐந்து உறுப்பினர்கள் கொண்ட பாமக மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஒன்றிய சேர்மனை கைப்பற்ற அதிமுக முயற்சிகள் எடுத்தது. விடுதலை சிறுத்தையை சேர்ந்தவரும் எதிர்பாராதவிதமாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். இதனால் அதிமுகவிற்கு ஆதரவளித்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. திமுகவிற்கு காங்கிரஸ் கட்சியும்¸ சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் ஆதரவு தெரிவிக்கவே திமுகவின் பலமும் 10 ஆக உயர்ந்தது. இரு கட்சிகளும் சம பலத்துடன் விளங்கவே அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரை தங்கள் பக்கம் இழுக்க திமுக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சேர்மன் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டதால் துணைத்தலைவர் பதவிக்கு அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவும், கூட்டணி கட்சியான பாமகவும் ஆசைப்பட்டன.
இதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாமக பிரமுகர் சதாசிவம் ஒன்றிய கவுன்சிலர் ஆன தனது மனைவி உஷாராணியுடன் பாமகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். இதையடுத்து திமுகவின் சார்பில் உஷாராணி துணைத்தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.
தற்போது ஆட்சி மாறியதால் காட்சிகளும் மாறியது. 8 இடங்களை கொண்ட திமுகவிற்கு 14 வாக்குகள் கிடைத்துள்ளன. பா.ம.க ஆதரவுடன் திமுக சுலபமாக வெற்றி பெற்றது. ஜமுனாமரத்தூரில் 3 நாட்கள் திமுகவினரின் பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டிருந்த திமுக மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு சில நேரங்களுக்கு முன்பு துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேனில் அழைத்து வரப்பட்டனர். முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி¸ தனது ஆதரவாளர்களின் கார்கள் பின்தொடர தேர்தல் நடைபெறும் இடத்திற்கு ஒரு ரவுண்டு வந்தார். நமக்கு(அதிமுக) 8 கவுன்சிலர்கள் ஆதரவு நிச்சயம் என செய்தியாளர்களிடம் சொல்லி விட்டு சென்றார். ஆனால் 6 ஓட்டுகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி¸ அண்ணாதுரை எம்.பி¸ பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் அதிமுக பலத்த சரிவை சந்தித்திருக்கிறது. ஆளும் கட்சியாக இருக்கும் போதே கூட்டணி கட்சிகளான பாமக¸ தேமுதிக ஆதரவுடன் சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி பெற அதிமுக தவறி விட்டதாகவும்¸ இதற்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலே காரணம் என்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.