பழங்குடியின மக்களோடு தீபாவளி கொண்டாடிய அரசு பள்ளி ஆசிரியை
ஜமுனாமரத்தூர் பழங்குடி இன மக்களோடு தீபாவளி கொண்டாடிய அரசு பள்ளி ஆசிரியை அவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
உற்சாகம் தரும் தீபாவளி பண்டிகையை மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டாடும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாதது. உதவி கிடைக்கும் போது அவர்களது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியின் ஒளியே உண்மையான தீபாவளி என்பதை உணர்த்தியிருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியை.
அவர் பெயர் யுவராணி. காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியையாக உள்ளார். இவர் இந்த வருட தீபாவளியை ஜமுனாமரத்தூர் மலைவாழ் மக்களோடு கொண்டாடியிருக்கிறார்.
ஜமுனாமரத்தூர் மேல்செப்புலி, கீழ் செப்பிலி, பட்டறை காடு ஆகிய பகுதியில் பழங்குடியின மக்களுடன் அரசு பள்ளி ஆசிரியை யுவராணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ், தங்களுடைய குழந்தைகளான இஷாந்த், இஷாந்தினி ஆகியோருடன் தங்கி தீபாவளி திருநாளை கொண்டாடினர்.
2 நாட்கள் மலைவாழ் மக்களுடன் தங்கியிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், அரிசி, இனிப்பு, புத்தாடைகள் ஆகியவற்றை மலைவாழ் மக்களுக்கு வழங்கினர்.
மேலும் பட்டறை காடு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்ளர், பேஸ்ட், பிரஸ், தேங்காய் எண்ணெய், சீப்பு, உள்ளாடைகள் மற்றும் கற்றல் துணை கருவி ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சியுடன் தீபாவளி திருநாளை கொண்டாடினர்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை யுவராணி, அவர் பணிபுரியும் பள்ளியில் பல்வேறு வேடமிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி; 8,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு எளிய முறையில் கணித பாடத்தை நடத்தியது பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று வித்தியாசமான முறையில் மலைவாழ் மக்களோடு தங்கி அவர்களுக்கு உதவிகள் செய்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய ஆசிரியை யுவராணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.