ஆரணி விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. பெண்ணின் தாயார்¸ டி.எஸ்.பி அலுவலகத்தில் சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. மனைவி பெயர் உஷா. இவர்களது மகள் ஸ்வேதா. இவர் ஆரணி அருகே உள்ள மோட்டுகுடிசை என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.
அப்போது இரும்பேடு கிராமத்தை சேர்ந்த மாதவனுக்கும்¸ ஸ்வேதாவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 10 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஸ்வேதா கல்லூரி முடிந்தும் மாலை வரை வீடு திரும்பவில்லை.
வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஆரணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து இருவரும் அங்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் மாலை மாற்றிக் கொண்ட வீடியோவும்¸ காதலன் வேறு ஜாதி என்பதால் தனது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றும்¸ தனக்கு 19 வயது ஆகி விட்டதால் தானே விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும்¸ யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் ஸ்வேதா பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கிடையில் காணாமல் போன தங்கள் பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி ஸ்வேதாவின் தந்தை ஏழுமலை¸ கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்வேதா¸ காதலுடன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஆரணி டி.எஸ்.பி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படி போலீசார் காதல் ஜோடிக்கு சம்மன் அனுப்பினர். இதன்பேரில் இன்று காலை காதல் ஜோடி டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தனர். காதல் ஜோடிக்கு துணையாக 30க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் இந்த இடத்தில் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஸ்வேதாவிடம் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது நல்ல வாழ்க்கை நாங்கள் அமைத்து தருகிறோம்¸ எங்களுடன் வந்து விடு என மகளிடம் பெற்றோர்கள் கெஞ்சி கேட்டு கதறினர். ஆனால் இதை கண்டு கொள்ளாத ஸ்வேதா காதல் கணவருடன் செல்ல விருப்பப்படுவதாக கூறினார். இதைக் கேட்டு பெண்ணின் தாயார் உஷா¸ தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் வைத்திருந்த சானிடைசரை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக உஷாவை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உஷா¸தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாதவன்¸ வேறு ஜாதி என்பதால் இந்த காதலுக்கு¸ ஸ்வேதாவின் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளாமல் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால் ஸ்வேதா வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது. டி.எஸ்.பி விசாரணையில் ஸ்வேதா¸ கணவருடன்தான் செல்வேன் என கூறிவிட்டார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தம்பி மனைவி மகளை மூளைச் சலவை செய்து¸ மிரட்டி திருமணம் நடத்தி உள்ளனர். மற்ற பெண்களுக்கு இதுபோல் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஸ்வேதாவின் பெரியப்பா வேதனை மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.