ஆரணி அருகே செல்போன் கடையை உடைத்து உதிரிபாகங்களை திருடிச் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மார்க்கெட் வீதியில் உள்ள தனியார் காம்பளக்ஸில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் கிராமத்தை சேர்ந்த தீப்சிங் என்பவர் ஜெய் அம்பாய் என்ற பெயரில் கடந்த 6 ஆண்டுகளாக செல்போன் கடையை நடத்தி வருகிறார். இவர் ஆரணி கேவச நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 8ந் தேதி இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போன் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.15லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஏற்கனவே கடந்த மாதம் பஜார் வீதியில் செல்போன் கடையில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடித்தது சென்ற நிலையில் 2வதாக நடைபெற்ற திருட்டு சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொள்ளையர்களை கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில்¸ ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தும்¸ சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தின் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர். கடைசியில் ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகில் கொள்ளையர்கள் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் பெயர்¸ விவரம் வருமாறு¸
1) ஜாலம்சிங் ரத்தோர் (27) சோனா போர்டா¸ ராஜஸ்தான்.
2) விக்ரம்சிங் (34) பியாரேஜ் கிராமம்¸ ராஜஸ்தான்.
3) ரகுல் சிங் (30) போர்டா கிராமம்¸ ராஜஸ்தான்
இவர்களிடமிருந்து 525 மொபைல் காம்போ எல்.இ.டி¸ 1100 மொபைல் டச் ஸ்கிரின் மற்றும் 30 மொபைல் டிஸ்பிளே ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டு உத்தரவின்படி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.