Homeசெய்திகள்மாமூல் இன்ஸ்பெக்டர் -ஆடியோ வெளியாகி பரபரப்பு

மாமூல் இன்ஸ்பெக்டர் -ஆடியோ வெளியாகி பரபரப்பு

"மாமூல்" இன்ஸ்பெக்டர் -ஆடியோ வெளியாகி பரபரப்பு

ஓவர்லோடுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லாரி முதலாளிகளிடம் மாமூல் வசூல் செய்யும் இன்ஸ்பெக்டர் குறித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாமூல் வசூல் செய்வதில் காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த  ஆடியோ வெளியானதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என எஸ்.பி பவன்குமார் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள பகுதி செய்யாறு பகுதியாகும். செய்யாறு கோட்டத்திற்குட்பட்ட தூசி காஞ்சிபுரம் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் அதிக அளவில் எம்சாண்ட் குவாரிகள் அமைந்துள்ளது. தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் எம்சாண்ட் லோடை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு செல்கின்றன. இது மட்டுமன்றி தொடர்ச்சியான மணல் கொள்ளை நடந்து வரும் பகுதியாகவும் உள்ளது. 

இந்த காவல் நிலையம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபடும் போலீசார் தப்பித்து விடுவதாக கூறப்படுகிறது. 

அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அண்ணாதுரை கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் தூசிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி ஓவர்லோடு கேஸ் போடுவேன் என மிரட்டி பணம் பறிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களிடம் மாதம் தோறும் ரூ.10ஆயிரம் மாமூல் பெறுவதாகவும் வெளியான ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. 

அந்த ஆடியோவில்¸ போலீஸ்காரரிடம் பேசும் லாரி உரிமையாளர் ஒருவர் இன்ஸ்பெக்டருக்கு ரூ.10ஆயிரம் மாமூல் தந்ததாக கூறுகிறார். மாமூல் பணத்தை போலீஸ்காரர்கள் உலகநாதன்(டிரைவர்)¸ சிலம்பரசன்¸ அண்ணாமலை ஆகியோரிடம் கொடுத்து விடுவேன் என்று கூறுகிறார். கடைசியாக லாரி ஓனரிடம் பேசிய போலீஸ்காரர் நாங்கள் ஒரு லாரியை கூட நிறுத்த முடியவில்லை.ஒரு கேஸ் கூட போட முடியவில்லை. கேட்டால் இன்ஸ்பெக்டருக்கு மாமூல் தருகிறோம் என்கின்றனர். நாங்கள் வேலையை செய்வதா? அல்லது வேலையை விட்டு வெளியில் கிளம்புவதா? என யோசனை செய்து கொண்டிருக்கிறோம் என அந்த ஆடியோவில் சொல்கிறார். 

இன்ஸ்பெக்டர் தனக்கென ஒரு டீமை வைத்துக் கொண்டு மாமூல் வசூலிப்பதால் “பலன்” கிடைக்காத எதிரணி போலீசார் இந்த ஆடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் துறையினரே மாமுல் பெற்றுக்கொண்டு குற்றங்களுக்கு துணை போகும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடியோவில் பேசிய போலீஸ்காரர்¸ வெளிமாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டிருப்பதால் அவர் வந்தவுடன் விசாரணை நடத்தி¸ விவரங்களை சேகரித்து அதன்பேரில் அதிகாரி தவறு செய்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்துள்ளார். 

See also  போலி பெயிண்ட் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!