Homeசெய்திகள்நாய்களுக்கான சிகிச்சை மையத்தை காலி செய்ய நகராட்சி உத்தரவு

நாய்களுக்கான சிகிச்சை மையத்தை காலி செய்ய நகராட்சி உத்தரவு

நாய்களுக்கான சிகிச்சை மையத்தையும், 40 வீடுகளையும் காலி செய்ய சொன்னதால் நாய் வளர்ப்பாளர்களும், குடியிருப்புவாசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் செங்கம் சாலையில், அரசு கலைக்கல்லூரிக்கு அருகில் சந்தை மைதானம் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மாடு,குதிரை போன்ற கால்நடை சந்தைகள் நடைபெறும்.

இந்த மைதானத்தின் ஓரம் நாய்களுக்கான இலவச சிகிச்சை மையம் அமைந்துள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த மையத்தை நடத்திட நகராட்சியும், அருணாச்சலா விலங்குகள் பாதுகாப்பு மையமும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.

நாய்களுக்கான சிகிச்சை மையத்தை காலி செய்ய நகராட்சி உத்தரவு

இந்த மையத்தில் கடந்த மார்ச் மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்ட விவரம்

  • 8 ஆயிரத்து 687 தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.
    20 ஆயிரத்து 309 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    78 ஆயிரத்து 559 வெளிப்புற நாய்களுக்கும்,
    2 லட்சத்து 14 ஆயிரத்து 595 உட்புற நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    9 ஆயிரத்து 58 எண்ணிக்கையிலான மற்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    8 ஆயிரத்து 94 விலங்குகள் அவசர சிகிச்சைக்காக மீட்கப்பட்டுள்ளது.
    1447 குட்டி நாய்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

பாம்புக்கும் சிகிச்சை

2 ஆயிரத்து 839 மாடுகள், 2 ஆயிரத்து 438 ஆடுகள், 236 குரங்குகள், 1230 கோழிகள், 1769 பூனைகள், 319 முயல்கள், 126 மயில், கிளி, பருந்து, குதிரை, மான், எருது, பாம்பு, வாத்து, ஆந்தை, கழுதை, அணில்கள்.

See also  ரூ.2 கோடியில் அம்மணி அம்மன் மட கோபுரம் புதுப்பிப்பு
நாய்களுக்கான சிகிச்சை மையத்தை காலி செய்ய நகராட்சி உத்தரவு
கால் உடைந்த குதிரைக்கு சிகிச்சை

திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த மையத்தைத்தான் தேடி வருவார்கள். இதே போல் ரோட்டில் அடிபடும் குரங்கு, மான் போன்ற விலங்குகளுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படும்.

தற்போது இந்த மையத்தில் 2 கால்நடை டாக்டர்கள், 22 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விலங்கின சிகிச்சை மையத்தையும், அதை சுற்றியுள்ள பட்டா இல்லாத 40 வீடுகளையும் காலி செய்யுமாறு நகராட்சியில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பது குடியிருப்பாளர்களும், நாய் வளர்ப்பவர்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.

இது சம்மந்தமாக நகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது கோர்ட்டு வழக்கின் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

நாய்களுக்கான சிகிச்சை மையத்தை காலி செய்ய நகராட்சி உத்தரவு

கண்ணீர் விட்ட பெண்

இப்பிரச்சனை திருவண்ணாமலை 25 ஆவது வார்டில் சமீபத்தில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் எதிரொலித்தது. அப்போது ஒரு பெண், வீடுகளை காலி செய்யுமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வந்துள்ளது, காலங்காலமாக வாழ்ந்து வரும் நாங்கள் எங்கே செல்வது? என தெரியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார். அவரை அருகில் உள்ளவர்கள் தேற்றினர்.

See also  பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்

இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவரின் கணவர் கார்த்தி வேல்மாறன் இப்பிரச்சனை பற்றி இந்த வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவிபழனி என்னிடம் தெரிவித்தார். நான் இதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். மேலும் 21 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதே இடத்தில் வசிக்க ஏதுவாக தங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என குடியிருப்புவாசிககளின் கோரிக்கையாக உள்ளது.

இந்த சிகிச்சை மையம் மூலம் வெறிநாய் தடுப்பு ஊசி போடப்படுவதால் வெறிநாய் பிரச்சனை இல்லாமல் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அருணாச்சலா விலங்குகள் பாதுகாப்பு மையம், வேறு இடம் ஏதும் இல்லாததால் இந்த மையத்தை அதே இடத்தில் தொடர்ந்து நடத்திட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!