திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் திடீரென கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம் எதிரில் கலைநயத்துடன் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 16 கால் மண்டபத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த கடைகள் எரிந்து நாசமானது. மண்டபமும் சேதமடைந்தது.
இதையடுத்து புதிய மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் அதில் கடைகளுக்கு இடம் ஒதுக்கி தரப்படவில்லை. அதற்கு பதில் திருமஞ்சன கோபுரம் மதில்சுவர் ஓரம் கடைகள் கட்டித் தரப்பட்டன.
இந்நிலையில் இந்த கடைகளுக்கு முன்பு, பக்தர்களை வரிசையில் நிறுத்தி வைக்கும் வண்ணம் தடுப்புகளை(பேரிகாட்) அமைக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் முயற்சிகள் மேற்கொள்வதை கேள்விப்பட்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் இன்று கடைகளை அடைத்து விட்டு தென் ஒத்தவாடைத் தெருவில் மனித சங்கலி போராட்டத்தை நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்திற்கு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் ஆலய கடை கட்டிட வாடகைதாரர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.சம்பத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.சிவக்குமார், பகுதி செயலாளர்கள் ஜி.சரவணன், பி.ரமேஷ், எஸ்.பழனிராஜ், சிற்பகலை சிவா, எம்.எஸ்.பூஜா கடை கே.எம்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பி.கே.ராஜ் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பகுதி செயலாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்சை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் உண்ணாமலையம்மன் நிலையம் மற்றும் தென்ஒத்தவாடைத்தெரு பகுதியில் சுமார் 86 கடைகளை நடத்தி வருகிறோம்.
பக்தர்களுக்கு தேவையான மங்களகரமான பூஜை பொருட்களான மஞ்சள், குங்குமம் தாலிசரடு, வளையல் மற்றும் விளக்குகள், சாமி படங்கள், சாமி சிலைகள், பாத்திரங்கள் தின்பண்டங்கள், குழந்தைகளுக்கு பொம்மைகள் முதலியன பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம்.
நாங்கள் சுமார் 26-ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக கடைகள் நடத்தி வருகிறோம். தீபதிருவிழாவின் போதும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வரும் சூழலில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை மூலம் கடைகளுக்கு முன் இரும்பு பேரிகாட் அமைப்பதை கைவிட வேண்டும் மற்றும் கடையை அடைக்க வாய்மொழி உத்தரவையும் கைவிட வேண்டும்.
சிறு வியாபாரிகளான நாங்கள் அனைவரும் இந்த தீபதிருவிழாவை நம்பித்தான் உள்ளோம். பக்தர்களின் தர்ம தரிசன வசதிக்கு ராஜகோபுரம் முன்பு காலி இடம் உள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
எங்கள் கோரிக்கை மனுவை பரிசலித்து எங்கள் கடையின் முன்பு பேரிகாட் அமைப்பதை கைவிட்டு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.