ஆபரேஷன் செய்யப்பட்ட பெண் பலியானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன். இவரது மனைவி ராஜகுமாரி. திருவண்ணாமலை பேகோபுர தெரு¸ மண்ணுபிள்ளை நகரில் உள்ள ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜகுமாரிக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக கூறி ஆபரேஷன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜகுமாரியின் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவரை அந்த மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் கதிரவன் தனது காரிலேயே அழைத்துச் சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராஜகுமாரிக்கு தவறான ஆபரேஷன் செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று மாலை மருத்துவமனை முன்பு ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அசாம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அதிரடிப்படை உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பிறகு ஆபரேஷன் செய்த டாக்டர் மீது போலீஸ் நிலையத்தில் ராஜகுமாரி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி இன்று இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை- வேலூர் ரோட்டில் உட்கார்ந்து டாக்டரை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்டதும் ராஜகுமாரியின் உறவினர்களில் முக்கியமான 5 பேரை அழைத்து கலெக்டர் பா.முருகேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பிரச்சனையில் உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியதை ஏற்று ராஜகுமாரியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினாலும், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க 7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதாலும் அப்பகுதி பரபரப்பு மிகுந்து காணப்பட்டது.