நில உடமைப்பதிவு¸ பட்டா மாறுதலில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் குறிப்பாக திருவண்ணாமலை பகுதிகளில் போலி பட்டா மூலம் நிலங்கள் அல்லது வீட்டு மனைகளை பறித்துக் கொள்வது¸ பட்டா¸ நில உடமை பதிவுகளில் தவறுகள் நடப்பது ஆகியவை அதிகரித்துள்ளது. இது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை தாசில்தாராக இருந்த வெங்கடேசனை அதிரடியாக மாற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.
மேலும் குறைகளை களைய சிறப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்ட நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல்¸ நில உடைமைப்பதிவுகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரித்திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து எதிர்வரும் 22.09.2021 அன்று காலை 11.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாளாகத்தில்¸ மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.
அது சமயம் நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களுடன் மனுசெய்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களிலும் அரசின் உதவித் தொகை பெறுவதற்கான மனுக்களை வாங்க ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.