Homeஆன்மீகம்கொட்டும் மழையில் விடிய, விடிய தேரோட்டம்

கொட்டும் மழையில் விடிய, விடிய தேரோட்டம்

கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் விடிய, விடிய தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் தேர் அதிகாலை நிலையை வந்தடைந்தது.

வரலாற்று உண்மையை வெளிப்படுத்தும் தேர்த்திருவிழா

அருட்பெருங்கடலாகிய சிவபெருமான், மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், பகலவனும் திங்களும் சக்கரமாகவும், பதினான்கு உலகமும் பதினான்கு தட்டுக்களாகவும், வானமே இருக்கையாகவும், நதிகள் கொடிகளாகவும் விண்மீன்கள் வீட்டுலகம் மேல் விரிப்பாகவும், விதானமாகவும், அட்டமலைகள் தூண்களாகவும், அட்ட யானைகள் தாங்குவன வாகவும், ஏழுகடல்களும் திரைச் சீலைகளாகவும், கன்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் கலன்களாகவும், வாயுக்கள் படிகளாகவும், நான்மறைகள் பூட்டப்படும் குதிரைகளாகவும் பொருத்தப்பட்ட தேரிலே எழுந்தருளினார்.

மாமேரு மலையை வில்லாகவும், கலைமகளை வில்லிற் பூட்டிய மணியாகவும் வாசுகியை நாணாகவும், திருமாலை அம்பாகவும் தீக்கடவுளை அம்பின் கூர்வாயாகவும், வாயு தேவனை அம்பின் இறகாகவும் கொண்டு, பிரமனாகிய சாரதி பிரணவமாகிய கோல் கொண்டு செலுத்தத் அசுரர்களை புன்னகைத் தீயினால் எரித்து நீறாக்குகிறார் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதே தேர்த்திருவிழாக் காட்சியாகும் என அழகாக விளக்குகிறார் அய்யா பாண்டுரங்கனார்.

ஆணவம், கன்மம், மாயை எனும் முப்புரங்களை எரித்துத் தாருகாக்கன், கமலாக்கன், வித்யூன்மாலி என்ற மூன்று அசுரர்களையும் ஆட்கொண்டார் என்பது மும்மலங்களையும் கெடுத்து விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் எனும் மூவகை ஆன்மாக்களையும் அடிமையாகக் கொண்டு, திருவடிப்பேற்றினை அளிக்கக் கூடியவர் இறைவன் என்ற உண்மையை உணர்த்துவது ஆகும்.

See also  திருவண்ணாமலை கோயிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை

பேரானந்தப் பெருவாழ்வு அளிப்பவர்

பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளைக் கெடுத்துப் பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்த்திருவிழா விளக்குகிறது.

இதனால் 2 வருடத்திற்கு பிறகு நேற்று நடைபெற்ற மகாதேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவு விநாயகர், முருகர் தேருக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

காலை 6.45க்கு விநாயகர் தேரும், 10.40க்கு வள்ளி தெய்வானை சமேத முருகர் தேரும் புறப்பட்டது. எமகண்டம் முடிந்ததும் 3.40க்கு அண்ணாமலையார் தேரான பெரிய தேர் புறப்பட்டது. கடலைக்கடை மூலை அருகில் வந்த போது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

திருவூடல் தெரு மேட்டிலிருந்து பேகோபுரத் தெருவுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது.

சந்தோஷத்தில் பக்தர்கள்

பிறகு லாவகமாக திருப்பப்பட்டு தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பெரிய தேர் இரவு 11-40க்கு நிலையை வந்தடைந்தது. பிரச்சனை இன்றி தேர் நிலையை வந்தடைந்ததும் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என சந்தோஷத்தில் பக்தர்கள் துள்ளி குதித்தனர். ஏராளமானோர் தேருக்கு முன் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர்.

See also  படவேடு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி கோயில் சிறப்புகள்

விநாயகர் மற்றும் முருகர் தேர்கள் ஏறக்குறைய 6 மணி நேரத்தில் மாடவீதியை வலம் வந்து நிலையை சேர்ந்த நிலையில் மழையினாலும், மேடான இடத்தில் வளைவில் உடனடியாக திரும்ப முடியாத நிலையாலும் பெரிய தேர் நிலையை வந்தடைய 8 மணி நேரம் ஆனது.

நள்ளிரவில் அம்மன் தேர் வலம் 

அதன்பிறகு அம்மன் தேரும், சண்டிகேசுவரர் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. நள்ளிரவில் குளிரையும் பொருட்படுத்தாமல் ‘ஓம் சக்தி, பராசக்தி’ ‘உண்ணாமலையம்மனுக்கு அரோகரா’ என்ற முழுக்கத்துடன் பெண்கள் அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இந்த தேர்கள் அதிகாலை 5 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. நேற்று காலை 6-45க்கு தொடங்கிய தேரோட்டம் இன்று அதிகாலை நிறைவு பெற்றது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!