மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 கிராமங்கள் வழியாக பஸ்கள் கூடுதல் நடைகளாக இயக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 50% மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 உயர்நிலைப்பள்ளிகள் ஆகும். மொத்தம் 1¸27¸741 மாணவ – மாணவியர்கள் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பில்லாமல்¸ பள்ளி¸ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வருவது முதல் வீட்டிற்கு செல்லும் வரை மாணவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதராத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்றிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில் குறைபாடுகள் ஏதுமிருப்பின் அது குறித்து 04175-250814 மற்றும் 04175-253845 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் குறித்து 01.09.2021 முதல் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
01.09.2021 முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சில வழித்தடங்களில் கூடுதல் நடைகளை இயக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு¸
வாய்விடாந்தாங்கல்¸ மேல்படூர்¸ கல்லறைப்பாடி¸ மஷார் மேனிலைப்பள்ளி செல்ல திருவண்ணாமலையிலிருந்து காலை 8-25 மணிக்கு புறப்படும் T29/A தடம் எண் கொண்ட பேருந்து மஷாருக்கு 9-15க்கு சென்றடையும்.
பெரியகுளம்¸ கெங்கம்பட்டு¸ ஆலத்தூர் மாணவர்கள்¸ காஞ்சி பெண்கள் மற்றும் ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு செல்ல திருவண்ணாமலையிலிருந்து காலை 8-00 மணிக்கு புறப்படும் 122KCB தடம் எண் கொண்ட பேருந்து காஞ்சிக்கு 8-50க்கு சென்றடையும்.
பாய்ச்சல்¸ கண்ணக்குருக்கை¸ கோளாப்பாடி¸ அய்யம்பாளையம் பகுதி மாணவர்கள்¸ திருவண்ணாமலை அரசினர் கலைக்கல்லூரி¸ சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி¸ டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி செல்வதற்கு செங்கத்திலிருந்து காலை 7-55 மணிக்கு புறப்படும் T42 தடம் எண் கொண்ட பேருந்து திருவண்ணாமலைக்கு 9-05க்கு சென்றடையும்.
தச்சூர்¸ அரையாலம்¸ சேர்பாக்கம் பகுதி மாணவர்கள்¸ ஆரணி அரசினர் மற்றும் தனியார் பள்ளி செல்வதற்கு தேவிகாபுரத்திலிருந்து காலை 7-30 மணிக்கு புறப்படும் 217/B தடம் எண் கொண்ட பேருந்து ஆரணிக்கு 8-30க்கு சென்றடையும்.
சதுப்பேரி¸ கூடலூர்¸ தச்சூர்¸ அரையாலம்¸ சேர்ப்பாக்கம் பகுதி மாணவர்கள்¸ ஆரணி அரசினர் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு போளுரிலிருந்து காலை 7-45 மணிக்கு புறப்படும் 245/A தடம் எண் கொண்ட பேருந்து ஆரணிக்கு 9-10க்கு சென்றடையும்.
தண்டரை¸ பெரும்பள்ளம்¸ வடதண்டலம்¸ அருகாவூர் பகுதி பள்ளி மாணவர்கள் செய்யார் செல்வதற்கு அரியூரிலிருந்து காலை 7-15 மணிக்கு புறப்படும் T9/A தடம் எண் கொண்ட பேருந்து செய்யாருக்கு 9-00 மணிக்கு சென்றடையும்.