சிவமும், சக்தியும் ஒருருவாகி ஏகபரஞ்சுடராகக் காட்சி தருவதை குறிக்கும் மகாதீபம் திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்டது.
பழமையான தீப விழா
திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருநாள் தமிழ்நாட்டில் நடைபெறும் திருவிழாக்களில் பழமையானதாகும். சங்க இலக்கியங்களாக போற்றப்படுகிற நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கார்த்திகை தீபத் திருவிழா போற்றி புகழப்படுகிறது.
ஏகபரம் பொருள் ஒன்றே
அண்ட கோடிகளையெல்லாம் அடக்கிக் கொண்டிருக்கிற பொருள், எல்லாப் பொருள்களையும் இயக்கிக் கொண்டிருக்கிற பொருள், பிறப்பு இறப்பு இல்லாத பொருள், எல்லாம் வல்ல பொருள், என்றும் உள்ள பொருள் என சிறப்பு வாய்ந்த ஏகபரம் பொருள் ஒன்றே, பல இல்லை என்ற தத்துவத்தை உணர்த்துவதே பரணி மற்றும் மகாதீப நிகழ்வுகளாகும்.
பரணி தீபம்
ஏக பரம்பொருளே, ஈசான மூர்த்தம், தற்புருடமூர்த்தம், அகோர மூர்த்தம், வாமதேவ மூர்த்தம், சத்தியோசாத மூர்த்தம் என ஐந்து பெயருடன் பஞ்ச மூர்த்தி ஆகிறது என ஆகமம் கூறுகிறது. ஒரு பரம்பொருள், ஐந்து மூர்த்திகளாதலை விளக்குவதுதான் தீபத்திருநாளன்று காலையில் கருவறையில் ஏற்றப்படும் பரணி தீபம்.
இன்று அதிகாலை கருவறையில் ஒரு பெரிய கற்பூரத்தில் தீபம் ஏற்றி அண்ணாமலைப் பெருமான் முன்னிலையில் தீபாராதனை நடைபெற்றது. இவ்வாறு தனிச்சுடர் ஒன்றினைப் பொருத்திக் காட்டுவது, பரம்பொருள் ஒன்றே, பல இல்லை என்ற தத்துவத்தை உணர்த்துவதாகும்.
ஐந்து மடக்குகளில் தீபம்
பிறகு அந்த தீபத்தை கொண்டு ஒரு பெரிய மடக்கிலுள்ள ஒற்றை நெய்த்திரியில் தீபம் ஏற்றப்பட்டது. பிறகு. ஒரு பரஞ்சுடரே, பஞ்ச கிருத்தியம் செய்யவேண்டி ஐந்து மூர்த்தங்களாக அதாவது பஞ்ச மூர்த்திகளாவதை குறிக்கும் வண்ணம் அந்த ஒரு சுடரில் இருந்து நந்தி தேவர்க்கு முன் ஐந்து பெரிய மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டன.
சன்னதிகளில் தீபம்
பிறகு இந்தப் பஞ்ச மூர்த்திகளும், பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதனைக் காட்டுவதற்காக, முதலில் கற்பூரச் சுடரில் இருந்து ஏற்றப்பட்ட ஒற்றை அகல் விளக்கை வலமாக எடுத்துச் சென்று அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகளிலும், விநாயகப் பெருமான் சன்னதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.
அர்த்த நாரீஸ்வரர்
காலையில், சுவாமி சன்னதியில் ஏகபரம்பொருளே, ஐந்து மூர்த்தங்களாவதனை(உருவம் ஆவதை) விளக்குதற்காக ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும், அம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் ஏகபரம் பொருளில் இருந்து உண்டான இந்த மூர்த்தங்கள் எல்லாம் மீண்டும் அந்த ஏகபரம் பொருளிலேயே ஒடுங்கும் என்பதை குறிக்கும் வண்ணம் மாலை 5-55க்கு அர்த்த நாரீஸ்வரர் உடன் வர கொடிமரத்திற்கு முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது.
அண்டகோடிகளுக்கெல்லாம் அன்னையாகிய உமா தேவி, அண்ணாமலைக்கு வந்து அருந்தவம் இயற்றி இடப்பாகம் பெற்றார். அதன் பயனாகச் சிவமும் சக்தியும் இணைந்து ஒரு உருவமான அர்த்தநாரீஸ்வரர் உண்டாயிற்று. அந்த அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய காலம், கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் ஆகும்.
ஏகபரஞ்சுடராக மகாதீபம்
எனவே அர்த்தநாரீஸ்வரர் பலி பீடத்தின் அருகில் வந்து காட்சி அளிக்க அந்த சமயத்தில் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் சிவமும், சக்தியும் ஒரு உருவாகி மலைச் சிகரத்தில் ஏகபரஞ்சுடராகக் காட்சி தருவதை குறிக்கும் வண்ணம் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது லட்சக்கணக்கான மக்கள் மலையை நோக்கி ‘ அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற தெய்வப் பேரொலியை முழங்கினர். ஒரு குறிப்பிட்ட கணத்தில் அரோகரா முழக்கம் ஒலிப்பது திருவண்ணாமலை தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் அண்ணாமலையாருக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
8ந் தேதி வரை சிறப்பு பஸ்-ரயில்
மகாதீபத்தையொட்டி திருவண்ணாமலையே விழா கோலமாக, எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. மகாதீபத்தை தரிசிக்க 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதாக பக்த பிரமுகர் ஒருவர் மதிப்பிட்டார்.
பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலையில் 180 சிறப்பு அதிரடி படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
பவுர்ணமி நேரம்
7ந்தேதி காலை 8.14 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 8ந் தேதி காலை 9.22மணிக்கு நிறைவடைகிறது. எனவே 8ந் தேதி வரை லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வர வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக வரும் 8ந் தேதி வரை சிறப்பு பஸ்களும், ரயில்களும் இயக்கப்படுகிறது.
தெப்பல் உற்சவம்
மகாதீபத்தை தொடர்ந்து 7ந் தேதி முதல் வரும் 9ந் தேதி வரை ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். முதல் நாள் இரவு 9 மணியளவில் சந்திரசேகரர் தெப்பலில் பவனிவந்து அருள்பாலிப்பார்.
2ம் நாள் 8ந் தேதி இரவு 9 மணியளவில் பராசக்தி அம்மன் தெப்பல் பவனியும் 3ம் நாள் 9ந் தேதி இரவு சுப்பிரமணியர் தெப்பல் பவனியும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயங்குளத்தில் தெப்பல் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.
11 நாட்கள் தீபம்
இன்று ஏற்றப்பட்ட மகாதீபம் 16ந் தேதி வரை வரை 11 நாட்கள் வரை பிரகாசிக்கும்.
-செந்தில் அருணாசலம்
தொடர்புடைய செய்தி…
புயலை அடக்கிய விஸ்வரூப தீபம்-மகா தீபத்தின் மகிமை