கோயிலை இடித்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அவர்களுக்கு அழிவு நிச்சயம் என திருவண்ணாமலையில் பாஜக கலாச்சார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா கூறினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சொத்து உயர்வு மற்றும் மின் கட்டணங்களை உயர்த்திய மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலாச்சார பிரிவு மாநில தலைவர் பெப்சி ஜி.சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
நாடாளுமன்ற-சட்டமன்ற தேர்தல்களில் பாஜகதான் வெற்றி பெறும். 4 வருடத்திற்கு முன்பெல்லாம் பாஜக கூட்டம் என்றால் 10 பேர், 20 பேர்தான் வருவார்கள். இன்றைக்கு 500 பேர் வருகின்றனர். எதிர்காலம் நமக்கு தான் என்ற தைரியம் பாஜகவினருக்கு வந்து விட்டது. மோடி என்ற இரும்பு மனிதர் இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார். அதே போல் தமிழகமும் பாஜக ஆட்சி மலரும் போது தலைநிமிரும். அன்று மின்கட்டணம் குறைக்கப்படும்.
திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும், தாய்மார்களும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கின்றனர். ஈஸ்வரன் பிறந்த இந்த பூமியில் இருந்து சொல்கிறேன். சிவன் கோயிலை இடித்தவர்கள் எவனும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இவர்களுடைய அழிவும் விரைவில் எழுதப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ‘அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘உயர்த்தாதே உயர்த்தாதே மின்கட்டணத்தை உயர்த்தாதே’ ‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் விடியல் அரசை கண்டிக்கிறோம்’ ‘வழங்கிடு வழங்கிடு தடையில்லா மின்சாரம் வழங்கிடு’ என்ற கோஷங்கள் முழங்க பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், ஒபிசி அணி மாநில துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், முருகன் மாவட்ட துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், இறைமாணிக்கம், முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் பாஸ்கர், சுரேஷ், நகர தலைவர் திருமாறன், நகர செயலாளர் டி.எஸ்.ஜெயசரவணன், திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர்கள் ஜி.ரவி, எஸ்.முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய தலைவர் எம்.சிவா நன்றி கூறினார்.