திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த யோகி பாபு, தான் சொந்தமாக கட்டிய வராகி கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.
1985ம் ஆண்டு பிறந்த யோகி பாபு 2008ம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 2009ல் இயக்குநர் அமீரின் யோகி படத்தில் நடித்ததால் யோகி பாபுவாக ஆனார். அவரது உடல் வாகுவும்¸ வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் அவரை நகைச்சுவை நடிகராக உயர்த்தியது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வரும் யோகி பாபுவின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள மேல்நாகரம்பேடு கிராமம் ஆகும். இவரது தந்தை ஒரு ராணுவ வீரர். யோகிபாபுவுக்கு உடன்பிறந்தவர்கள் 3 பேர். அந்த கிராமத்தில் யோகி பாபுவுக்கு 5 சென்ட் நிலம் உள்ளது. இங்கு ஏற்கனவே அம்மன் கோயிலை கட்டியிருக்கிறார். இந்த கோயிலில் வைத்து தான் அவருக்கும்¸ மருத்துவர் மஞ்சு பார்கவிக்கும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ந் தேதி திருமணம் நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு அந்த கோயிலுக்கு அருகில் புதியதாக வராகி கோயிலை யோகி பாபு கட்ட தொடங்கினார். இப்பணி நிறைவு அடைந்ததும் இன்று (26-08-2021) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு சிறிது நேரம் முன்பு யோகி பாபு தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் மேல்நாகரம்பேடுக்கு வந்தார். நேராக கோயிலுக்கு சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வேத வித்தகர்கள் யாக பூஜை செய்து கலச ஊர்வலத்தை தொடர்ந்து புனித நீரை கோவிலின் கோபுர உச்சியில் உள்ள கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கோவிலிலுக்குள் உள்ள வராகி அம்மனுக்கு நடிகர் யோகிபாபு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.