திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கா ஸ்டாலின் தனது கணவரின் ராசி¸ நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்¸ பூரம் நட்சத்திரம்¸ சிம்ம ராசிக்காரர் ஆவார். சிம்ம ராசிக்கு அதிபதி சிவபெருமான் என்பதால் துர்க்கா ஸ்டாலின்¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அடிக்கடி வந்து தரிசிப்பது வழக்கம். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நட்சத்திர பிரகாரம் கணவரின் பிறந்த நாளையொட்டி அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது கணவர் நீடுழி வாழவும்¸ சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வரவும் அவர் அண்ணாமலையார் கோயிலில் வேண்டிக் கொண்டார்.
தமிழக சட்டமன்றத்தில் திமுகவின் முதல் நிதிநிலை அறிக்கையின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற்ற நிலையில் துர்கா ஸ்டாலின் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தனது கணவரின் ராசி¸ நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டார். அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல்வரின் மனைவி எந்தவித பாதுகாப்புமின்றி எளிமையாக வந்து சென்றது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. தரிசனம் முடித்து விட்டு வந்த துர்கா ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். கோயிலுக்கு வந்திருப்பதால் பேட்டி வேண்டாம் என துர்கா ஸ்டாலின் மறுத்து விட்டார். திமுக அரசின் 100 நாள் நிறைவு குறித்து கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன்¸ துர்கா ஸ்டாலினுடன் கோயிலுக்குள் வந்திருந்தார்.