கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்திட அனுமதிக்காததால் ரூ.10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு களிமண் மற்றும் காகித கூழ் விநாயகர் தயாரிப்பாளர் நலச் சங்கத்தினர் இன்று(19-08-2021) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாங்கள் காலம் காலமாய் களிமண் மற்றும் காகித கூழ் விநாயகர் சிலை செய்து வருகிறோம். சென்ற ஆண்டு கொரோனா என்னும் கொடிய நோயால் விநாயகர் சதுர்த்தியை தமிழ்நாடு அரசு எந்தவொரு முன்னறிவிப்பின்றி தடை செய்து விட்டது. இதனால் சென்ற ஆண்டு தயாரித்த விநாயகர் சிலை அனைத்தும் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.
வங்கியில் பெற்ற கடனும் வெளியில் பெற்ற கடனுக்கும் வட்டிகூட கட்ட முடியாத நிலையில் உருவாயின. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தியை நம்பி ஆண்டு முழுவதும் செய்த விநாயகர் சிலைகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தியினை உரிய கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த விநாயகர் சதுர்த்தியை திருவிழா கோலம் போல் எண்ணாமல் இதற்கு பின்னால் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரம் உள்ளன.
இதுவரை தமிழ்நாடு அரசும்¸ மாவட்ட நிர்வாகமும்¸ ஒன்றிய அரசும் இதுவரை எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலம்¸ முதியோர்களின் மருத்துவச் செலவு¸ எங்களின் குடும்ப செலவு என எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளோம்.
எனவே இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தியை உரிய கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
சென்ற ஆண்டு எந்தவொரு முன்னறிவிப்பின்றி எங்களின் விநாயகர் சிலை கலை கூடங்களை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சீல் வைத்து விட்டனர். இதனால் சென்ற ஆண்டு எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்ட்டது.
எனவே புதியதாக தொழில் தொடங்குவதற்க வங்கியில் கடனுதவி வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யவேண்டும். எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறும் எங்களது விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு தனிக்குழு அமைத்து மீண்டும் எங்களது பணி தொடர வங்கியில் கடன் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பதற்கு எந்தவொரு தடையுமில்லாமல் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கி தற்போது அழியும் நிலையில் இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.