Homeஆன்மீகம்திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

திருவண்ணாமலை பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரம் வடிவங்கள் அமைய பெற்ற ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலும், 15 அடி உயர திருவுருவத்துடன் காட்சியளிக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன.

மங்கல விஷயங்களை தவிர்த்து இறை வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது. இம் மாதத்தில் வைணவ தலங்களில் பக்தர்கள் ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வர். சிவ தலங்களில் திருவெம்பாவை பாசுரங்களை பாராயணம் செய்வர்.

இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு விசேஷமானதாகும். ஏகாதசி நாட்களில் விரதம் இருக்கும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாளில் பெறலாம் என விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

இந்த சிறப்பு மிகு மாதத்தில் திருவண்ணாமலை பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களை பற்றி தெரிந்து கொள்வோம்

ஸ்ரீ நவநீத கோபால கிருஷ்ணன் திருக்கோயில்

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

முகலாயர்களுடன் போர்

சோழர் காலத்தில் சிங்கபுரி கோட்டம் என்றழைக்கப்பட்ட செஞ்சி கோட்டையை ஆட்சி செய்து வந்த ராஜா தேசிங்கு சிறந்த விஷ்ணு பக்தராக திகழ்ந்து வந்தார். முகலாயர் மன்னர்களுடன் ஏற்பட்ட போரின் போது தான் பூஜித்து வந்த விக்கிரகங்களை அவர்களிடமிருந்து காப்பாற்ற நினைத்தார். இதையடுத்து அந்த விக்கிரகங்களை அரண்மனைத் திருக்கோயில் பட்டாச்சாரியாரிடம் ஒப்படைத்து பத்திரமாக பாதுகாக்கும்படி கூறினார்.

தடுத்த எதிரி படை வீரர்கள்

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரில் வாழ்ந்த தன் உறவினர்களை வரவழைத்து இந்த விக்கிரகங்களை ஒப்படைத்து போர் நடைபெறுவதால் எதிரி படை வீரர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

பட்டாச்சாரியாரின் உறவினர்கள் விக்கிரகங்களை மஞ்சள் துணியில் போர்த்தி குழந்தையை எடுத்து வருவது போல எடுத்து வந்தனர். வழியில் எதிரி படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். முகலாயர்கள் அம்மை நோய் என்றால் அச்சமடைவார்கள் என்பதால் குழந்தைக்கு அம்மை நோய் வந்துள்ளது என கூறினர். இதனால் அவர்கள் செல்ல முகலாய வீரர்கள் வழி விட்டனர். இதையடுத்து அவர்கள் விக்கிரகங்களை மேக்களுருக்கு எடுத்து வந்து பாதுகாத்தனர்.

See also  அம்பாளோடு இணைந்தார் அண்ணாமலையார்

500 ஆண்டுகளுக்கு முந்தையது

அதன்பிறகு நடைபெற்ற போரில் ராஜா தேசிங்கு வீரமரணம் அடையவே அவர் வழிபட்ட நவநீத கோபால கிருஷ்ண சுவாமி விக்கிரகத்தை கொண்டு மேக்களுர் கிராமத்தில் கோயில் எழுப்பப்பட்டது. ஸ்ரீ நவநீத கோபால கிருஷ்ணன் திருக்கோயில் என்ற பெயர் கொண்ட இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக விளங்கி வருகிறது.

விஷ்ணுவின் தசாவதாரம்

இக் கோயிலிலுள்ள உற்சவமூர்த்தியான ஸ்ரீ வரதராஜ பெருமாள் தரை சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. உயர்ந்த மதிற்சுவர்கள், உட்பிரகாரம் சுற்று மற்றும் கோபுரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமையப்பெற்று அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்களில் காணப்படும் சிற்பங்கள் யாவும் புராணக் கதைகளை விளக்கும் கருவூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரம் சிறப்புகள் கோயிலின் மண்டப தூண்களில் செதுக்கப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

வைகுண்ட ஏகாதசி

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, வைகாசி மாதத்தில் நடைபெறும் கருடசேவை, ஆனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக விமர்சையாக நடை பெறுவது கோயிலின் சிறப்பாகும். அப்போது கருட வாகனத்திலும், இந்திர விமானத்திலும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தேர் பவனியும் நடைபெறும். இது தவிர புரட்டாசி மாதத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க

ஆனி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி அலங்கார பல்லக்கில் பவனி வருவதை பார்க்க கோடி கோடி கண்கள் வேண்டும்.

See also  ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

இந்த பத்து நாள் பிரம்மோற்சவத்தின் போது யாகசாலையில் கலசம் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. இது ஒன்பதாவது நாள் விழாவின் போது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தலையில் கலசதீர்த்தத்தை ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூரிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ளது மேக்களூர்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோயில்

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

15 அடி உயர பெருமாள்

ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருவண்ணாமலை – சென்னை செல்லும் ரோட்டில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் அமைந்திருக்கிறது.

இங்கு 15 அடி உயரத்தில் ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பொருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7 அடி உயரத்தில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் அமர்ந்த கோலத்திலும், அரங்கநாதர் 12 அடி உயரத்தில் சயன கோலத்திலும் காட்சியளிக்கிறார்கள்.

மேலும் கருடாழ்வார், ஹனுமான், ஆண்டாள், இராமனுஜர் சிலைகளும் உள்ளது. இது தவிர 10 அடி உயரத்தில் பத்மாவதி தாயாரும், 8 அடி உயரத்தில் கிருஷ்ணன் விக்கிரகங்களும் புதியதாக பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய தயாராக உள்ளது.

கனவில் பெருமாள்

பெருமாளுக்கு தினமும் அலங்காரம், அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. உற்சவர் உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கேட்ட வரங்களை தரும் பெருமாளாக விளங்கும் இக் கோயிலை கட்டியது குறித்து அதன் நிர்வாகி வள்ளி கூறியதாவது,

சாத்தனூர் அணை வீரணம் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு குடியேறினோம். எனது கணவர் சுப்பிரமணி அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். சோ.கீழ்நாச்சிப்பட்டில் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி குடியேறுவதற்காக காலி மனைகள் வாங்கியிருந்தோம்.

See also  மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை விழா

2013-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை பலவிதமான அவதாரத்தில் ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பெருமாள் எனது கனவில் காட்சியளித்து வந்தார். தனக்கொரு கோவில் கட்டுமாறும் கூறினார். இதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டேன். இதையடுத்து எனக்கு பலவித சோதனைகளும், கஷ்டங்களும் வந்தது.

காஞ்சிபுரம் சென்று நாடி ஜோதிடரை சந்தித்தோம். அவரும் பெருமாள் என் கனவில் தோன்றியதையும், ஜாதகத்தில் உள்ளவாறு பெருமாள் கோயில் கட்டியாக வேண்டும் என்று கூறினார்.

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

ஏழைகளுக்கு இலவச திருமணம்

பிறகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து அம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகு பெருமாள் கோயிலை கட்ட தொடங்கினோம். கஷ்டப்பட்டு கோயிலை கட்டி விட்டோம். பெருமாள், லஷ்மி நரசிம்மர், அரங்கநாதர், கருடாழ்வார், ஹனுமான், ஆண்டாள், இராமனுஜர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜைகளை நடத்தி வருகிறோம்.

பத்மாவதி தாயாரும், 8 அடி உயரத்தில் கிருஷ்ணன் விக்கிரகங்களும் புதியதாக பிரதிஷ்டை செய்து கட்டி முடிக்கப்பட்டுள்ள கோயிலுக்கு பணம் பற்றாக்குறை காரணமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருக்கிறோம்.

திருவண்ணாமலை பகுதி பெருமாள் கோயில்களின் சிறப்புகள்

மேலும் ஸ்ரீ வள்ளி சித்தர் பீடம் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் இக்கோயிலில் ஏழை, எளியவருக்கு இலவசமாக திருமணங்களை நடத்தி வருகிறோம். இலவச திருமண மண்டபம் உள்ளது. இதில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்களால் இயன்ற பொருளுதவி, பண உதவி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு…

ஸ்ரீ வள்ளி சித்தர் பீடம் அறக்கட்டளை
சோ.கீழ்நாச்சிப்பட்டு
சென்னை மெயின் ரோடு
திருவண்ணாமலை
கைப்பேசி : 7418703024,7305178300


மேலும் பல ஆன்மீக செய்திகளை தெரிந்து கொள்ள…

https://www.agnimurasu.com/spirituality

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!