அதிகாரிகளை கண்டித்து திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி சொந்தமாக திருவண்ணாமலை நகரில் மொத்தம் 440 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ளன.
கொரோனா நோய் தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததாலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் கடைகளில் வருமானம் இன்றி இருந்ததால் கொரோனா நேரத்தில் உள்ள வாடகை பாக்கிகளை ரத்து செய்யவும், மத்திய பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என மத்திய பேருந்து நிலைய வாடகைதாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரூ.6 கோடி பாக்கியை வசூலிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் நேற்று மத்திய பஸ் நிலையத்தில் உள்ள சில கடைகளுக்கு சீல் வைத்தனர். மற்ற கடைதாரர்கள் பாக்கியில் ஒரு தொகையை செலுத்தியதால் மேற்கொண்டு நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
கொரோனா நேரத்தில் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வாடகையை குறைக்காமல் மொத்த வாடகையை வசூலிப்பதா? என கேட்டு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியதாக கூறி திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின் கீழ் சில கடைகளுக்கு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளை கண்டித்து கடைகளை அடைத்து விட்டு பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து பேச்சு வார்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
இது குறித்து மத்திய பேருந்து நிலைய வாடகைதாரர்கள் சங்கத் தலைவர் மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அபராத தொகையான ரூ.5 ஆயிரத்தை உடனே கொடுக்காவிட்டால் கடையை மூடி சீல் வைப்போம் என அதிகாரிகள் அராஜக முறையில் நடந்து கொண்டனர். பெரிய பெரிய கம்பெனிகளின் பிளாஸ்டிக் கவர் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் நாங்கள் குடிசை தொழிலில் தயாரிக்கும் தின்பண்டங்கள் அடங்கிய கவர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
இப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டு எழுந்து நிற்கின்றோம். இந்த நேரத்தில் எங்கள் வயிற்றில் அடிக்கின்றனர். கடை வாடகையை ராசி வட்டி வாங்கி கட்டும் நிலையில் உள்ளோம். எங்களை வாழ விடுங்கள், அழித்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். வியாபாரிகள் நடத்திய போராட்டத்தினால் மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.