Homeஆன்மீகம்குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

திருவண்ணாமலை அடுத்த கிளையூரில் தாழமடுவு காளி கோவிலில் குழந்தை வடிவாக காட்சியளிக்கும் அம்மனை சுற்றி நீர் வற்றாமல் இருந்து வருகிறது.  

நோய் தீர்க்கும் தீர்த்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் டேம் அடுத்து ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ளது கிளையூர் கிராமம். இங்கு செய்யாற்றங்கரையில் தண்ணீர் சூழ அம்மன் குழந்தை வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை வணங்கி தீர்த்தம் எடுத்துச் சென்று தீராத நோய் உள்ளவர்கள் உட்கொண்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றுகின்றனர். அன்னை ஆதிபராசக்தியே உருவமாகவும் (சிரசு), தீர்த்தமாகவும், ஜோதியாகவும் முப்பரிமாண தோற்றத்தில் தோன்றியுள்ளது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சிரசு அம்மன் மீது பூ பழம்

இங்கு சிரசாக உள்ள அம்மனுக்கு பூ எலுமிச்சை பழம் வாங்கிவருகின்றனர் பக்தர்கள். அப்படி கொண்டுவரும் பூபழத்தை பூசாரியிடம் கொடுத்து பூவையும் எலுமிச்சை பழத்தையும் அம்மன் சரசின் மீது பாட்டுபாடி வர்ணிக்கிறார். அப்போது பழம் கீழே விழுந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இத்தலத்தில் ஐதீகமாக உள்ளது. மேலும் பில்லி¸ சூனியம்¸ ஏவல் போன்ற செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் காளியம்மன் கோவில் முன்புள்ள திரிசூலத்தில் எலுமிச்சை பழத்தை சொருகினால் புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம்வேண்டியும் பிரிந்த கணவன் மனைவி ஒன்றுகூடவும் விவசாயம் செழிக்கவும் கல்வியில் சிறக்கவும் கால்நடைகள் நோயின்றி வாழவும் மூன்று அம்மனுக்கும் நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

முப்பரிமாணத்தில் அம்பாள்

இத்தலத்தில் வேறெங்கும் காணாத வகையில் காளிதேவி தீர்த்தமாகவும் ஜோதியாகவும் குழந்தையாகவும் இருப்பதால் இங்கு உயிர் பலியிடும் வழக்கம் இல்லை. இந்த அம்மனை தலைமுறை தலைமுறையாக மலைவாழ் மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். குழந்தை வடிவமாக உள்ள அம்மனை சுற்றி வற்றாத நீர் செய்யாற்றங்கரையில் குழந்தை வடிவமாக அமர்ந்த கோலத்தில் உள்ள அம்மனை சுற்றி கோடை காலங்களில் தண்ணீர் வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது. காற்றாற்று வெள்ளம் வந்தால்கூட அம்மன் இருக்கும் இடத்தை சுற்றி தெளிந்த நீர் மட்டும் வருவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். மற்ற பகுதிகளில் தண்ணீர் சூடாக வந்தாலும் அம்மன் இருக்கும் இடத்தில் குளிர்ந்த நீராக வருவது வியப்புக்குரியது.

அம்மனை தூக்கி வீசிய பூசாரி

ஜவ்வாதுமலை அடிவாரத்தில் பழமைவாய்ந்த அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் தலைமுறை தலைமுறையாக பூசாரியாக பணிவிடை செய்து வருபவருக்கும் இவரது சந்ததியினருக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது. இதனை பூசாரி அம்பாளிடம் பூஜை செய்யும்போது கேட்க¸ அதற்கு அம்பாள் நீ எனக்கு என்ன செய்வாய் என்று கேட்க¸ எனக்கு நீ வாரிசு தந்தால் என்னை போலவே உனக்கு பணிவிடை செய்ய சொல்வேன் என்றார். அம்பாள் உனக்கு வாரிசு உண்டாகும் என்று கூற அடுத்த சில மாதங்களிலேயே பூசாரி மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

குழந்தையை நன்கு பராமரித்து வந்த பூசாரி குடும்பத்தினர் வளர்ந்து 10 வயதானதும் குழந்தையை தன்னுடன் அழைத்து சென்று அபிஷேக ஆராதனை செய்வது¸ அம்மனுக்கு விளக்கு போடுவது¸ அலங்காரம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். பின்னர் பூசாரி தனது பெண்ணுக்கு மலைவாழ் மக்கள் முறைப்படி திருமணம் ஏற்பாடு செய்ய முற்பட்டார். அப்போது அம்பாள் அதனை தடுத்து எனக்காக நேர்த்திவிட்ட குழந்தையை நீ எப்படி வேறொருவருக்கு மணம் முடிக்க முடியும் என்று கேட்க¸ அதற்கு பூசாரியோ சந்ததி வளர வேண்டுமென்று சொன்னார். அம்பாள் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. ஒரு நாள் கோவிலிலிருந்து பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்காக எடுத்துக் கொண்டு செய்யாற்றங்கரைக்கு மகளுடன் வந்தார்.

 அம்மனுக்கு அபிஷேக செய்ய பயன்படுத்தும் செப்பு தவளையை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் குழந்தையை அனுப்பி நீ சென்று எடுத்துவா என்று மகளிடம் கூற போன குழந்தை நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதில் பதறிப் போன பூசாரி கோவிலுக்கு சென்று குழந்தையை பெயரிட்டு அழைத்தார். அப்போது குழந்தையின் குரல் மட்டுமே கேட்டது. பின்னர் தன் உறவினர்களை அழைத்து வந்து கோவிலை இடித்து உள்ளே சென்றுபார்க்கும் போது அந்த குழந்தை கற்சிலையாக நின்றது. அதிர்ச்சியடைந்த பூசாரி எனக்கு வாரிசு கொடுத்தமாறி கொடுத்து தாயே மீண்டும் அபகரித்துக் கொண்டாயே என்று ஆவேசத்துடன் காளியம்மன் சிலையை பெயர்த்து தூக்கி தாழம்பூ புதரில் வீசி கோபத்தை தணித்துக்கொண்டார் என்பது செவிவழி செய்தியாக உள்ளது. அந்த சிலை விழுந்த இடத்தில் நீரூற்று பொங்கி வந்ததாகவும் அந்த நீரூற்றே இன்றும் நோய் தீர்க்கும் தீர்த்தமாக உள்ளதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தை வடிவ அம்மனை சுற்றி வற்றாத நீர்

அம்மனை காண வெளியூரிலிருந்து திரளும் பக்தர்கள்

ஆரம்ப காலத்தில் மலைவாழ்மக்கள் மட்டுமே வணங்கிவந்த இந்த அம்மனை இப்போது வெளியூர் மற்றும வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி¸ செவ்வாய்¸ ஞாயிறு மற்றும் பவுர்ணமி அமாவாசை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அம்மன் அருள்பெற்று செல்கின்றனர்.

அமைவிடம்:

திருவண்ணாமலை வேலூர் சென்னை காஞ்சிபுரம் பெங்களுரு கிருஷ்ணகிரி ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து பஸ் வசதி உள்ளது. செங்கத்திலிருந்து 20வது கி.மீ. தூரத்தில் கிளையூர் தாழமடுவு காளி கோவில் உள்ளது.

தொடர்புக்கு:

நிர்வாகி எம்.சி. அசோக்- 9751642467

பூசாரி- 8489733887

– செய்தி-படம்:- ப.பரசுராமன் 

See also  பவுர்ணமி, தைப்பூசம், விடுமுறை நாள்-அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!