திருவண்ணாமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து விற்கும திட்டத்திற்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் PM KUSUM திட்டம் சூரியசக்தி (ஒளி) மின்சாரம் தயாரித்தல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)¸ வேளாண்மைத்துறை¸ வேளாண்மை பொறியியல் துறை¸ தோட்டக்கலைத்துறை¸ முன்னோடி வங்கி மேலாளர்¸ தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள் உதவிப் பொறியாளர்¸ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் சூரியசக்தி (ஒளி) மின்சாரம் தயாரித்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு விரிவான தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே கலந்துரையாடல் மூலம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உரிய பதிலும் அளிக்கப்பட்டது.
இத் திட்டத்தின்படி 7.5 எச்.பி(HP)வரை திறன் கொண்ட இலவச விவசாய மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் 11 கே.டபிள்யூபி (KWP) சூரிய மின்கலன் அமைத்து ஒரு நாளைக்கு 55 யூனிட் (UNIT) வரை மின் உற்பத்தி செய்து தங்கள் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள மின்சாரத்தினை தமிழ்நாடு மின்சார வாரியம் மின்கட்டமைப்புக்கு விற்பதன் மூலம் ஆண்டிற்கு ரூ.40¸000 வரை வருமானம் அடைய முடியும். இத் திட்டத்தின் மூலம் 25 ஆண்டுகள் வரை வருமானம் பெறலாம்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் 1100 சதுரடி நிலத்தினை ஒதுக்கீடு செய்து அவ்விடத்தில் சூரிய ஒளி தகடுகளை அமைக்க வேண்டும்.
இதற்கான மொத்த தொகையான ரூ.5 இலட்சத்தில் ரூ.3 இலட்சம் (60%) சதவீதம் மத்திய மாநில அரசுகளின் மானியமாக பெறலாம். மீதமுள்ள ரூ.2 இலட்சம் (40%) விவசாயிகளின் பங்களிப்பாகும். இத்தொகையினை முன்னோடி வங்கியின் மூலம் குறைந்த வட்டியில் விவசாயக் கடனாகவும் பெறலாம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் விவசாய பெருமக்கள் விருப்ப மனுவினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.