கடனாக வாங்கிய பணத்துக்காக எழுதி கொடுத்த நிலத்தை திருப்பி தராமல் பைனான்சியர் ஏமாற்றி வருவதாக கூறி கலெக்டர் காலில் விழுந்து பெண் கதறி அழுதார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் ஆண்டாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். தொழிலாளி. இவரது மனைவிக்கு இருதய ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்பட்டதால் சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பைனான்சியர் சுரேஷ் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கியிருந்தாராம். இதற்காக தனது 98 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில் ரூ.4 லட்சத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க சென்ற போது நிலத்தை வீரப்பன் பெயருக்கு எழுதி தர சுரேஷ் மறுத்து விட்டாராம். மேலும் ஆண்டாளுரைச் சேர்ந்த சேட்டு என்பவருக்கு நிலத்தை பேசி அக்ரிமெண்ட் போட்டு விட்டதாகவும்¸ நிலத்தை கொடுக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 லட்சமும்¸ சேட்டுக்கு ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை எழுதி கொடுப்பேன் என கூறி விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீரப்பன் தனது மனைவி செல்வியுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். அங்கு ஆய்வு கூட்டத்தை முடித்து விட்டு வந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனுவை அளித்தனர். அமைச்சரை வழியனுப்பி விட்டு நின்றிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்சின் காலில் செல்வி விழுந்து கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடமிருந்து மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த மனுவில் நிலத்தை கேட்டால் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என சுரேஷ் மிரட்டி வருவதாகவும்¸ தங்கள் குடும்பத்திற்கும்¸ நிலத்தை சுரேஷிடம் அக்ரிமெண்ட் போட்ட சந்திரன் மற்றும் சேட்டு என்பவர்களுக்கும் வழி பிரச்சனை இருப்பதாகவும்¸ இதை காரணம் காட்டி சுரேஷ்¸ சந்திரன்¸ சேட்டு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டு பழி வாங்கும் போக்கில் நிலத்தை கொடுக்காமல் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டி வருதாகவும்¸ கொலை மிரட்டல் விடுத்து வருபவரிடமிருந்து தங்களை காப்பாற்றி தங்களின் பூர்வீக நிலத்தை மீட்டுத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.