கிரிவலப்பாதையில் இன்று நடைபெற்ற விபத்தில் திமுக நிர்வாகி பலியானார். அவரது நண்பர் உள்பட 2 படுகாயம் அடைந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சி.கணேசன் (வயது 43). துர்க்கையம்மன் கோயில் அருகே வாட்ச் கடை வைத்து நடத்தி வந்தார். மனைவி பெயர் மகாலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணேசன், போளுர் ரோட்டில் டெய்லர் கடை வைத்திருக்கும் தனது நண்பர் நாகராஜ் என்பவருடன் இன்று கிரிவலப்பாதைக்கு சென்றார். பகல் 1-15 மணி அளவில் கிரிவலப்பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு அவர்கள் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் 2 வண்டியிலிருந்தவர்களும் கீழே விழுந்தனர். இதில் கணேசன் படுகாயமடைந்து அதே இடத்தல் இறந்தார். நாகராஜ் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தம்பி கோபாலுடன்(20) சமீபத்தில் வாங்கப்பட்ட புது மோட்டார் சைக்கிளில் கிரிவலம் வந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பொங்கலுக்காக மஷாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த கணேசனின் மனைவி, கணவர் இறந்த செய்தியை அலறி துடித்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் இறந்த கணேசன், திமுகவில் செயற்குழு உறுப்பினராகவும், 4 வது வார்டு தூய்மை அருணையின் காவலராகவும் இருந்தார்.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் அதிவேக வாகனங்கள்
தினமும் ஏராளமானோர் மலை வலம் வரும் கிரிவலப்பாதையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறித்து ஏற்கனவே பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஹாரன்களை அலற விட்டுக் கொண்டு அதிவேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது என்றும், கிரிவலப்பாதை ரோந்து வாகனமும் ஏதோ பெயரளவிற்கே செயல்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.