அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வாங்குவதை வைத்து தூக்கம் வராது¸ உதவி செய்தால்தான் தூக்கம் வரும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.08.2021) உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு துறையின் மூலம் 1158 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 670 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்¸ சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்¸ சட்டன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்)¸ எஸ். ஆம்பேத்குமார் (வந்தவாசி)¸ பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்¸ மு. பிரதாப்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம்¸ கைத்தறி மற்றும் துணிநூல் சரக உதவி இயக்குநர் ப.இளங்கோவன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன்¸ மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம்¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ முன்னாள் கவுன்சிலர் கார்த்தி வேல்மாறன்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன்¸ அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது¸
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும்¸ தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு முதல் முறையாக வித்திட்ட மாவட்டம் திருவண்ணாமலை தான். ஏனென்றால்¸ இத்திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது. அப்போது¸ அதற்கு ஸ்டாலின் என பெயரிடப்பட்டு இருந்தது. தற்போது¸ ஆட்சிக்கு வந்த பிறகு¸ இத்திட்டத்தை முதலமைச்சர்¸ தனித்துறையாக அறிவித்து¸ 100 நாட்களில் முடிந்த வரை தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இத்திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 17¸981 மனுக்கள் பெட்டியில் போடப்பட்டது. இதற்கான பெட்டியை செய்ததே நான் தான். அதை எப்படி திறக்க வேண்டும்¸ எப்படி மனுக்களை போட வேண்டும் என சொன்னது நான்தான். 25 பெட்டிகளை செய்தேன். ஒரு பெட்டியை நாங்கள் வைத்துக் கொண்டு 24 பெட்டிகளை மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 5¸552 மனுக்கனை பரிசீலனை செய்து உதவிகளை வழங்கி வருகிறார்கள். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உழைத்த உத்தம அதிகாரிகளுக்கு அரசின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பணியை அலுவலர்கள் தொடர்ந்து செய்திட வேண்டும். மாத சம்பளம் வாங்குவது உங்களுடைய உரிமை. அதில் தூக்கம் வராது. எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறோமோ அதை வைத்து தான் தூக்கம் வரும். அது ஒரு சமூக தொண்டு. அரசு அலுவலர்களான இருப்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் உதவுவதுதான் சமூக தொண்டு. காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருவது¸ 5 மணிக்கு வேலை முடிப்பது என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உரிமை. 5 மணியிலிருந்து 10 மணி வரை உழைக்கக் கூடிய அலுவலர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அலுவலர்களுக்கு சமூக நோக்கம் இருக்கிறது¸ சமுதாய பணிகளை நாம் செய்ய வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது. அப்படி உழைத்தால்தான் இந்த மாவட்டத்தை மேலுக்கு கொண்டு வர முடியும். மீதமுள்ள மனுக்கள் மீதும் அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.
மாவட்ட ஆட்சியரும்¸ காவல் கண்காணிப்பாளரும் நீண்ட நேரம் வேலை பார்த்தால் போதாது. அனைத்து அரசு அலுவலர்களும்¸ சமூக தொண்டுடன் நேரம்¸ காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி தொகை கேட்டு அமைச்சர்¸ சட்டமன்ற உறுப்பினர்¸ உள்ளாட்சி பிரதிநிதிகள்¸ அரசு அலுவலர்கள் கிராமங்களுக்கு செல்லும் போது பலர் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 9000-க்கும் மேற்பட்ட முதியோர் உதவிதொகை கோரிக்கை மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு செய்து கொடுத்தால் வருவாய்த்துறை அமைச்சரிடம் பேசி¸ விரைந்து உதவித்தொகை கிடைக்க முயற்சிகள் செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 17ஆயிரத்து 981 மனுக்களில் 6755 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 966 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 260 மனுக்கள் காத்திருப்பில் உள்ளது.
இந்த மனுக்களோடு சேர்த்து ஓய்வூதியம் கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களும் அதிக அளவு நிலுவையில் இருப்பதாலேயே அரசு ஊழியர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்ற தொனியில் எ.வ.வேலு பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.