முதியோர் உதவி தொகை கேட்டு வரும் மனுக்களை தள்ளுபடி செய்வதில் அக்கறை காட்டக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டகளை சார்ந்த வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
6400 மனுக்கள் நிலுவை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் 18லட்சத்து 82ஆயிரத்து 107, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 லட்சம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.40 லட்சம் பயனாளிகளுக்கு சாதிச்சான்று மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் 6400 மனுக்கள் நிலுவையில் உள்ளது. பட்டா பெறுவதிலும், சான்று பெறுவதிலும் நீண்ட நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என ஒரு குற்றச்சாட்டு வருவாய்த்துறை மீது இருந்தது. அதை மாற்றி யாராக இருந்தாலும் 15 தினங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் காரணமாக நிலுவை குறைந்து இருக்கிறது.
15 தினங்களுக்குள் சான்று
முடிந்த மட்டும் சான்றிதழ் வாங்குவதில் மனுக்களை தள்ளுபடி செய்யாமல் அவர்களை அழைத்து பேசி விவரம் கேட்டு அதை எல்லாம் செய்ய வேண்டுமென சொல்லி இருக்கிறோம். பட்டா வழங்குவதிலும், பட்டா பிரித்துக் கொடுப்பதிலும், இ பட்டா வழங்குவதிலும் அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை 15 தினங்களுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அதேபோல் வேறு துறைகளில் உள்ள நிலங்களை அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் எடுத்துக் கொடுக்க வேண்டும்(ஆர்ஜிதம்) என உத்தரவிட்டிருக்கிறோம்.
முதியோர் உதவித் தொகையை பொறுத்தவரை தள்ளுபடி செய்வதில் அக்கறையாக இல்லாமல் அவர்களுக்கு கொடுப்பதற்கு வேண்டிய வழி வகைகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். எந்தெந்த ஜாதி எந்த எந்த பகுதியில் உள்ளது, மலைவாழ் மக்கள் எங்கு உள்ளனர்? எந்தெந்த ஜாதிக்கு பி.சி. சான்றிதழ் கொடுக்காமல் உள்ளது, எந்தெந்த ஜாதிக்கு எஸ்டி கொடுக்காமல் உள்ளது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.
விரைவில் அறிவிப்பு
இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. எங்கள் மாவட்டத்தில் ஒரு மாதிரி இருக்கிறது, உங்கள் மாவட்டத்தில் ஒரு மாதிரி உள்ளது. எனவே அதற்குரிய நடவடிக்கைகள் எடுத்து இந்த மாவட்டத்தில் எந்த ஜாதிகள் எஸ்டியில் வருகிறது? எஸ்சியில் எது வருகிறது? பிசியில் எது வருகிறது என்பதை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் துறை சார்பில் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணை, 1 நபருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணை, 1 நபருக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற துணை தலைவர் கு.பிச்சாண்டி, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய், வருவாய் நிர்வாக ஆணையர் ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பா.முருகேஷ் (திருவண்ணாமலை), ஷரவன் குமார் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி க.தேவராஜ் (ஜோலார்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), ஆ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), தா.உதயசூரியன் (சங்கராபுரம்), எ.ஜெ.கண்ணன் (உளுந்தூர்பேட்டை), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், செய்யார் சார் ஆட்சியர் அனாமிகா உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனார்.