Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி முன் உள்ள தங்க கொடி மரத்தில் இன்று ஆடிப்பூர கொடியேற்றம் பக்தர்களின்றி நடைபெற்றது.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன்¸ தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சாயண புண்ணிய காலம் என்பர். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடக்கு நோக்கி சூரிய பகவான் பயணம் செய்வது உத்தராயண புண்ணிய காலமாகும். ஆடி மாதம் தட்சாயண புண்ணிய காலத்தின் தொடக்கமாகும். வடக்கு நோக்கி நகரும் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்யும் இந்த ஆடி மாதம் முதற்கொண்டுதான் திருவிழாக்கள் துவங்குகிறது. சிவபெருமான் அருகில் வீற்றிருக்கும் அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.

ஆடி¸ ஆவணி¸ புரட்டாசி என தை மாதம் பொங்கல் வரை திருவிழாக்களை துவக்கி வைக்கிற மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இதில் ஆடிப்பூரம் விசேஷமானதாகும். உலகத்தை காத்து ரட்சிக்கிற அம்பிகையின் அவதாரங்களில் ஒன்றான உமாதேவியின் அவதார நாளான ஆடிப்பூரத்தில் அம்பாள் கோயில்களில் வளைகாப்பு நடைபெறும். சக்தியாக உருவெடுத்த அம்மனுக்கு மஞ்சள்¸ சந்தனம்¸ குங்கும காப்பு அலங்காரம் செய்யப்படும். அம்மன் கோயில்களில் பாலாபிஷேகம் நடக்கும். தாய்மை அடைந்த பெண்ணை மகிழ்விக்கும் வளைகாப்பு போல உலக மக்களை காக்கும் அம்மனுக்கு பக்தர்கள் வளையல் அணிவித்து மகிழ்வர்.

See also  முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

இப்படி சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர விழா¸ பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது பிறகு உண்ணாமலை அம்மன் சன்னதி பின்புறம் உள்ள உற்சவ மூர்த்தியான பராசக்தி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

பின்பு விநாயகர்¸ பராசக்தி அம்மன் தங்க கொடி மரத்தில் எழுந்தருளி காட்சி தந்தனர். அம்மன் சன்னதி எதிரே உள்ள 52 அடி உயர தங்க கொடி மரத்தில் இன்று காலை சரியாக 6-32 மணி அளவில் கிருத்திகை நட்சத்திரம், கடக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பெரிய பட்டம் சுவாமிநாதன் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின்றி கொடியேற்று விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

கொடியேற்றத்தை தொடர்ந்து 10 நாட்கள் 5ம் பிரகாரத்தில் சாமி வலம் வருதல் நடக்கிறது. கடைசி நாளான 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும். நள்ளிரவு வேளையில் உண்ணாமலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இந்த தீ மிதி விழா அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். வேறு எந்த சிவாலயத்திலும் தீ மிதி விழாவை பார்க்க முடியாது.

See also  பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகள்

அன்று இரவு உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு நைவேத்தியமாக மூலிகை மருந்து நெய்வேத்தியம் செய்யப்படுவது சிறப்பாகும்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!