பவுர்ணமி, தைப்பூசம், விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நினைக்க முக்தித் தரும் தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபட்டு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
நேற்று இரவு 10.41 மணிக்கு தொடங்கிய தை மாத பவுர்ணமி இன்று நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் சனிக்கிழமையும், ஞாயிற்றுகிழமையும் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.
இன்று பவுர்ணமி, தைப்பூசம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமும் சேர்ந்து வந்ததால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். பவுர்ணமியை யொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் 2 தினங்களும் நடைபெற்றது. உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அண்ணாமலையார் கோயிலும், 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சோதனை அடிப்படையில் 500 பேர் அமரும் வகையில் கோயிலுக்குள் பந்தல் மற்றும் இருக்கை வசதி செய்து தரப்பட்டிருந்தது. அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்கு 3 மணி முதல் 4 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் பவுர்ணமியை யொட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்கு செல்ல தேரடித் தெருவிலிருந்து கோகுல கிருஷ்ணா திருமண மண்டபம் சந்து வழியாக பல மணி நேரம் பக்தர்கள் வெறுங்காலுடன் நின்று வெயிலில் அவதிப்பட்டனர்.
இது குறித்து கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் கூறுகையில் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு திரும்பியதாக தெரிவித்தார்.