செட்டப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் குறைந்த மாத சந்தாக்கட்டணத்தில் TACTV சேவை வழங்கப்பட்டு வந்தும் செயலாக்கத்தில் இல்லாத செட்டப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் உள்ள உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் உள்ள செட்டப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற மாவட்ட துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 3 மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாத அரசு கேபிள் டிவி நிறுவன செட்டப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும்¸ அல்லது அவற்றைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க மறுப்பதாக கேபிள் டிவி ஆபரேட்டர்களால் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. அரசு இலவசமாக வழங்கும் செட்டப் பாக்ஸ்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது அதனை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பயன்படுத்தாத செட்டப் பாக்ஸ்களை திரும்ப பெற்று ஒப்படைப்பது உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொறுப்பாகும்.
தவறும் பட்சத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் கட்டணமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ரூ.140 + GST என்ற குறைந்த மாத சந்தா தொகையில் அதிகமான சேனல்களை வழங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அவர்களின் பகுதியில் அரசு கேபிள் டி.வி சேவையை வழங்கும் உள்ளுர் ஆப்பரேட்டர்களிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை அந்த கேபிள் டி.வி ஆப்பரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருசில கேபிள் டிவி உள்ளுர் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடமிருந்து செட்டாப்பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு அதை பொதுமக்களுக்கு வழங்காமல் தங்கள் சுயலாபத்திற்காக தவறான விளம்பரங்களை சந்தாதாரர்களிடம் செய்து தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக வசூல் செய்வதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த செயல்பாடுகளால் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் 21ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.