Homeசெய்திகள்இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு-எ.வ.வேலு அறிவிப்பு

இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு-எ.வ.வேலு அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் இலவச பயிற்சி வகுப்பு துவக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை¸ முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்¸ சிலீங்¸ டைல்ஸ்¸ நவீன கழிப்பறை அமைத்து சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. 

விழாவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன்¸ த.ரமணன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

விழாவில் கலந்து கொண்டு¸ பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு 250க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும்¸ 50க்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்களுக்கு கேரம் போர்டு¸ வாலிபால்¸ கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகளை வழங்கினார். 

நூலகத்தை பார்வையிட்ட பிறகு அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸ 

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு உதவியாக திருவண்ணாமலை தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்து என்னை 95ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். பொதுமக்களுக்கு பணியாற்றுவதற்காக கலைஞர் ஆட்சியில் இருக்கிறபொழுது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திறந்து வைக்கப்பட்ட அலுவலகம்தான் இந்த அலுவலகம்

இந்த அலுவலகத்திலிருந்து தொகுதி மக்கள் பயனுறும் வகையில் அரசு உதவி கோரும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜெராக்ஸ் இலவசமாக எடுத்து கொள்ளலாம். கல்லூரி மாணவர்கள் வந்து படிப்பதற்காக பாதி அலுவலகத்தை நூலகமாக மாற்றியிருக்கிறோம். ஏற்கனவே இலவச கணினி பயிற்சி¸ இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி இந்த ஆண்டு நம் பகுதி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ஒரு பயிற்சி மையத்தை துவக்க உள்ளோம். பட்டதாரி மாணவர்கள் இதை பயன்படுத்தக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.; இந்த தொகுதி மக்களுக்காக பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் எந்நேரமும் திறந்திருக்கும். அதற்காக பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர் அவர்கள் 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் முதல்வரானவுடன் நான் வைத்த முதல் கோரிக்கை என்னவென்றால் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை உருவாக்கி தரவேண்டும் என்பது தான். 

கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் திருவண்ணாமலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் வரவில்லை. அறிவிப்போடு நின்றுவிட்டது. எனவே புதிய பேருந்து நிலையம்¸ பைபாஸ் ரோடு அருகில் அமைந்திட சம்மந்தப்பட்ட அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். அடுத்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்க இருக்கிறேன். 

நகராட்சி கடைகளுக்கு அதிக வாடகை விதிக்கப்பட்டிருப்பதாக வாடகைதாரர்கள் அளித்த மனுவை பரிசீலித்து சம்மந்தப்பட்ட அமைச்சர் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி¸ பெ.சு.தி.சரவணன்¸ எஸ்.அம்பேத்குமார்¸ ஓ.ஜோதி¸ மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதிசீனுவாசன்¸ மாநில தொ.மு.ச.¸ செயலாளர் க.சௌந்தரராசன்¸ வழக்கறிஞர்கள் கே.வி.மனோகரன்¸ நா.பழனி¸ ந.சீனுவாசன்¸ டி.எம்.கதிரவன் மற்றும் இரா.ஜீவானந்தம்¸ டி.வி.எம்.நேரு¸ காலேஜ் கு.ரவி¸ ப்ரியா ப.விஜயரங்கன்¸ குட்டி புகழேந்தி¸ சு.விஜி(எ)விஜயராஜ்¸வ.முத்துமாறன்¸ டாஸ்மாக் ஆறுமுகம்¸ டி.எம்.கலையரசு பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

முடிவில் இல.குணசேகரன் நன்றி கூறினார்.

இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என்ற எ.வ.வேலுவின் அறிவிப்பு தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

விழாவுக்கு வந்த அமைச்சருக்கு  பெண்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.மங்கல வாத்தியங்கள் முழுங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முகப்பில் வாழை மரம்¸ மாவிலைகள் கட்டியும்¸ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது. ரிப்பன் கத்தரித்தும்¸குத்து விளக்கேற்றியும் அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். 

அமைச்சர் வந்ததும் அவரை வரவேற்க சமூக இடைவெளியின்றி கட்சியினர் முண்டியத்துக் கொண்டு சென்றதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

See also  கேமராக்கள் மூலம் கிராமங்கள் கண்காணிப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!