அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள சோமாசிபாடி சுப்பிரமணியர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுவதை யொட்டி 60 அடி உயரத்தில் முருகர் சிலை, 2 நுழைவு வாயில்கள், முருகப்பெருமானின் 16 வடிவங்களை சித்தரிக்கும் சிலைகளுடன் சுற்றுச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அகண்ட பரிபூரண சச்சிதானந்த சொரூபமாய் விளங்கும் பரம்பொருள் ஆன்மகோடிகள் ஆணவம், கன்மம் என்கிற மலநீக்கம் பெற்று பரமாத்மாவை அடையும் பொருட்டு அருள்திருமேனி தாங்கி அவதரித்த மூர்தங்கள் பலவற்றுள் முருகன் அவதாரமும் ஒன்றாகும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நடுநாயகமாக உள்ளதும் அயனரி காணாத சோதிலிங்கமாய் விளங்கும் திருவண்ணாமலையின் கீழ்பரிசத்தில் குறிஞ்சிக் கிழவன்(மலை மற்றும் மலைசார்ந்த நிலத்திற்குரிய தலைவன்) என்றும் அருணகிரிநாதரால் ‘நீலோத்பங்க செங்கழநிர் மலர் கொடியோனே’ என்று புகழ்ந்து பாடப் பெற்ற முருகபெருமான் சோமாசிபாடி குன்றில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கிருத்திகையில் நடக்கும் அற்புதம்
450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் சரவண தீர்த்தமும், செங்கழுநீர் தீர்த்தமும், குமார தீர்த்தமும், சுனை வடிவமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. பாவங்களை போக்கக் கூடியதாக விளங்கும் சரவணபவ தீர்த்தத்தில் பக்தர்கள் மொட்டை அடித்து குளித்து நேர்த்திக் கடனை செலுத்துவர். குமாரதீர்த்தத்தின் நீர் சுவாமியின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். செங்கழுநீர் தீர்த்தத்தில் செங்கழுநீர்கொடியின் வேற்பாகத்தில் அரும்பு ஒன்று கிருத்திகை மட்டுமே தோன்றும். இப்பூவை சுவாமிக்கு அர்ப்பணம் செய்வது ஒவ்வொரு கிருத்திகையிலும் நடைபெற்று வரும் அற்புதம் ஆகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயில் ராஜகோபுரம் மற்றும் மூலவர்,விமானம் உள்ளிட்ட பிரகாரங்களுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதற்கான பாலாலயம் நிகழ்ச்சி(அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீது மூர்ததங்களின் சாந்நித்யத்தை மாற்றுவது) கோயில் வளாகத்தில் இன்று காலை நடந்தது.
இதையொட்டி யாக சாலையில் கலசங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகளும் அதனைத் தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து கலசம் புறப்பாடும், அத்திப் பலகைக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அத்திப் பலகையை கோயிலில் மூலவர் அருகே உள்ள விமானத்தில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உபயதாரர்கள் நகரத்தார் சங்க தலைவர் விஜி (எ)சிதம்பரம் செட்டியார், பொருளாளர் அழகப்ப செட்டியார், அறங்காவலர்கள் வீரப்பன், செம்பாசிதம்பரம்,ராமசாமி குடும்பத்தார், அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் மணியம் ராஜா, சோமாசிபாடி கோயில் குருக்கள் பாலசுப்பிரமணி, சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை யொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று மலேசியாவில் இருப்பது போல் 60 அடி உயரத்தில் முருகர் சிலையை நிறுவவும், 2 நுழைவு வாயில்கள், முருகப்பெருமானின் 16 அம்சங்களை கொண்ட சிலைகளுடன் சுற்றுச் சுவர் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.