திருவண்ணாமலை காவல் துறையினருக்கு 150 சதவீதம் விழிப்புணர்வு தேவை. வடமாநிலங்களில் இருந்து இங்கு வருகிறார்கள், இரவு நேர ரோந்து பணியை காவல்துறையினர் தொடங்க வேண்டும் என கடந்த ஆண்டே அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தமிழ்நாட்டை அதிர வைத்துள்ளது. வடமாநில கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக திருவண்ணாமலைக்கு வந்து எந்நேரமும் போக்குவரத்து உள்ள அதுவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 2 டெப்போக்கள் உள்ள இடத்தில் ஆற, அமர கேஸ் கட்டர் மிஷினால் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றது போலீஸ் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே போல் போளுரிலும் மெயின் ரோட்டிலும் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அங்கு ஏடிஎம் மிஷினுக்கு தீ வைத்துள்ளனர். அந்த நேரத்தில் இரவு ரோந்து பணியாற்றிய போலீசாரை கண்துடைப்புக்காக ஆயுதபடைக்கு மாற்றம் செய்திருக்கின்றனர் உயர் அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் குறித்த விவரங்கள் பதிவிடப்படும். ஆனால் ஏடிஎம் கொள்ளை நடந்த 11ந் தேதி யார் இரவு ரோந்துக்கான அதிகாரி என்ற விவரம் இல்லாமல் உள்ளது. அதே போல் 8, 9, 10 ஆகிய நாட்களின் இரவு ரோந்து விவரமும் இல்லை. மற்ற நாட்களில் சென்றவர்களின் விவரம் உள்ளது. இது பற்றி பார்வையாளர்கள் கமெண்ட்டில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அன்றைய தினமே தச்சம்பட்டு பகுதியில் கார் திருட்டு, திருவண்ணாமலை சாரோன் ஆசிரியர் நகரில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு போன்றவையும் நடந்திருக்கிறது. இதே போன்று திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
‘திருவண்ணாமலைக்கு பல பேர் வந்து போகின்றனர். மாவட்டத் தலைநகராக இது உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் திருவண்ணாமலைக்கு வந்து போவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.
நம்மூர் ஆன்மீக பூமி என்ற காரணத்தினால் கிரிவலம் என்ற பெயரில் பல மாநிலங்களில் இருந்து குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து கிரிவலம் செல்கிறார்கள். எனவே அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. மற்ற மாவட்ட காவல்துறையினருக்கு 50 சதவீத விழிப்புணர்வு தேவை என்றால் நமது மாவட்ட காவல் துறையினருக்கு 100சதவீதம் அல்ல 150 சதவீதம் விழிப்புணர்வு தேவை.
ரயில் நிலையங்களில் இறங்கி போதைப் பொருட்களை இரு சக்கர வாகனங்களில் நகருக்குள் எடுத்து வருகிற நிலை இருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. எனவே இரவு நேர ரோந்தை காவல்துறையினர் தொடங்க வேண்டும். கிரிவலப் பாதையில் பகல் நேரங்களில் மட்டுமல்ல இரவு நேரங்களிலும் மக்கள் செல்கிறார்கள். எனவே கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கூடுதலாக இருக்க வேண்டும்’
இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது கலெக்டர், எஸ்.பியை அருகில் வைத்துக் கொண்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியது.
பார்க்க…
https://www.agnimurasu.com/2022/08/blog-post_11-3.html
ஆடியோவாக கேட்க…
அமைச்சர் அறிவுரையை ஏற்று இனிமேலாவது காவல்துறை விழிப்போடு செயல்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.