Homeசெய்திகள்கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் கலெக்டரை பார்க்க அனுமதிக்க முடியாது என போலீசார் கூறி விட்டதால் கலெக்டரின் காரை நிறுத்தி கோரிக்கையை தெரிவிக்க கிராம மக்கள் நீண்ட நேரம் நுழைவு வாயில் அருகில் காத்திருந்தனர்.

கிராம மக்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் உள்ளது அரசூர் கிராமம். இங்கு சுமார் 40 ஏக்கர் நிலத்தில் இருக்கும் உள்ள கற்கள் மற்றும் குன்றுகளை வெட்டி எடுக்க தனியார் நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஆட்சேபனை தெரிவிக்கும் நோட்டீஸ், அந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் இது பற்றி கிராம மக்களிடம் சென்று கூறினார்.

வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவர்கள் இது பற்றி தங்களிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக கூறி வட்டார வளர்ச்சி அரசூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று பகல் வந்தனர்.

கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

கலெக்டரிடம் மனு

அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த போலீசார், கிராம மக்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். அவர்கள் கலெக்டர் முருகேஷ்சை சந்தித்து குடியிருப்புக்கு அருகாமையில் நிலம் உள்ளதால் அதில் கல்குவாரி மற்றும் கிராவல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

See also  பஸ் நிலையம் எதிரில் உள்ள லாட்ஜ்க்கு சீல்

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

குடிநீர், காற்று மாசுபடும்

செய்யார் வட்டம், அரசூர் கிராமத்தில் பட்டா எண் 677ல் 4.185 ஹெக்டேர் பரப்பளவில் கிராவல் மண் மற்றும் கல்குவாரி அமைக்க Rsl Blue Metal நிறுவனத்தின் உரிமையாளர் லாவண்யா கணவர் பெயர் ரமேஷ் என்பவர் தடையில்லா சான்று மற்றும் அனுமதிக்கு செய்யாறு வட்டாட்சியரிடம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இது சம்மந்தமாக வருவாய் துறை மூலமாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாகவும் எங்களுக்கு முறையான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை. குவாரி கோரப்படும் இடமானது 1000க்கும் மேற்பட்ட கிராம குடியிருப்பிற்கு மிக அருகாமையிலேயே (100 மீட்டருக்குள்) அமைந்துள்ளது.

மேற்கண்ட நிறுவனத்திற்கு கிராவல் மண் மற்றும் குவாரி அமைக்க அனுமதி வழங்கினால் எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிப்பு, குடிநீர்மாசு, காற்று மாசு, கனிமவள இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் எங்கள் ஊரில் பெறும்பாலானவர்களுக்கு கால்நடை (2000 க்கும் மேற்பட்ட மாடுகள், 10,000க்கும் மேற்பட்ட ஆடுகள்) வளர்ப்பே வாழ்வாதாரமாக உள்ளதால் பலருக்கு வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தும்.

மேலும் எங்களது கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் கல்வி பயில (இடைநிலை, உயர்நிலை, கல்லூரி) புரிசை, செய்யாறு சென்றுவரும் நிலையே உள்ளது. இந்த குவாரி அமைப்பு கல்வி பயில்வதை பெருமளவில் பாதித்து, மாணவர்களிடையேயும், பெற்றோரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தும்.

See also  மூதாட்டியை பலிகடாவாக்கி தப்பிய சாராய கும்பல்

ஏரி-குளங்கள் பாதிப்பு

குவாரி கோரப்படுமிடத்ததிற்கு அருகாமையில் கிராமத்தின் ஏரிகள் மற்றும் குளங்கள் (30 மீட்டருக்குள்) அமைந்துள்ளது. இந்த ஏரிகளே கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குவாரி அமைக்கப்பட்டால் ஏரி, குளங்களின் நீர்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும் குவாரி அமைப்பதன் மூலம் எங்களுடைய விளைநிலங்கள் முற்றிலும் அதன் தன்மையை இழந்து விவசாயம் பாதிக்கப்பட்டு கிராம வளர்ச்சி முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் கிராம பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்வதுடன் வருங்கால சந்ததிகள் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாக்கப்படும்

எங்கள் கிராமத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள திரும்பூண்டி, குளமந்தை, எருமைவெட்டி, சித்தாமூர்,அனப்பத்தூர், புரிசை கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரும் காற்று மாசினால் பாதிப்படையும் சூழல் உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் எங்கள் கிராம மக்களின் நலனை கருதியும், சுற்றியுள்ள கிராம மக்களின் நலனை கருதியும் லாவண்யா என்பவருக்கு கிராவல் மண் எடுக்க, கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

நுழைவு வாயிலில் காத்திருப்பு

இந்நிலையில் அரசூரிலிருந்து வருகை தந்துள்ள அனைவரையும் கலெக்டரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதி அளிக்காததால் மதிய உணவுக்காக கலெக்டர் வீட்டுக்கு செல்லும் போது காரை நிறுத்தி கோரிக்கையை தெரிவிக்கலாம் என் கிராம மக்கள் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு காத்திருந்தனர். பிறகு நுழைவு வாயிலில் வரிசையாக நின்றனர்.

See also  சொல்லி கொடுக்க ஆசிரியர் இல்லை- பள்ளிக்கு பூட்டு

கூடுதல் கலெக்டர். பயிற்சி கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோரது கார்களும், மற்ற அலுவலர்களின் கார்களும் வெளியே சென்றதே தவிர கடைசி வரை கலெக்டர் கார் வரவில்லை. இதனால் கிராம மக்கள் சோர்ந்து போயினர்.

கலெக்டருக்கு இரவு 8 மணி வரை ஆய்வு கூட்டங்கள் இருப்பதால் மதிய உணவுக்கு செல்லாமல் அலுவலகத்திலேயே இருக்கிறார் என கிராம மக்களுக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து 2வது முறையாக அரசூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் சென்று கலெக்டரை சந்தித்தனர்.

கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

மக்கள்தான் முக்கியம்

அவர்களிடம் பேசிய கலெக்டர் முருகேஷ், பஞ்சாயத்து தீர்மானம் இல்லாமல் கல்குவாரி அமைக்க முடியாது, கணிமவள உதவி இயக்குநரை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன், தனியார் நிலத்தில் கற்களை வெட்டி எடுக்கும் போது 3 மீட்டருக்குள் வீடுகள் இருக்க கூடாது என விதிமுறை உள்ளது. நடவடிக்கை எடுப்போம் என முன்பே சொல்லி விட்டேன், கவலைப்படாமல் போங்கள், இது தவிர செய்யாறு சப்-கலெக்டரையும் விசாரிக்க சொல்லுகிறேன். கல்குவாரி முக்கியம் அல்ல, மக்கள்தான் முக்கியம், கல்குவாரி வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன? அரசுக்கு வருமானம் வருவதற்காகத்தான் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விதிமீறல் இல்லாமல் இயங்க வேண்டும். அப்படி விதிமீறல் இருந்தால் அனுமதி அளிக்க மாட்டோம் என்றார்.

இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!