திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனிதிருமஞ்சனத்தை யொட்டி நடராஜருக்கு 16 வகை குளிர்ந்த பொருட்களால் அபிஷேகம்¸ 16 வகை தீபங்களால் ஆராதனையும் நடைபெற்றது.
ஆனி மாதத்தில் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகமும்¸ நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறும். திருமஞ்சனம் என்றால் அபிஷேகத்தை குறிக்கும். சிவபெருமான் உஷ்ணத்தை தாங்கியிருப்பதால் அவரை குளிர்விக்கும் பொருட்டு மழை காலமான ஆனி மாதத்தில் 16 வகையான குளிர்ந்த பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அபிஷேகம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சிவ ரூபமான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். இதில் மூன்று நட்சத்திர அபிஷேகம் மூன்று திதி அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
வண்ண¸வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான்
இதில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்திரா தரிசனமும்¸ ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆனி திருமஞ்சனமான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டது. பிறகு நேற்று இரவே ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கிய நடராஜ பெருமானுக்கு அபிஷேகப் பொடி¸ மஞ்சள்¸ பால்¸ தயிர்¸ இளநீர்¸ விபூதி¸ கரும்புச்சாறு¸ எலுமிச்சைச்சாறு¸ சந்தனம்¸ பஞ்சாமிர்தம்¸ தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பிறகு வண்ண¸வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமானுக்கு வேதாகம மந்திரங்கள் முழங்க சோடச உபசாரம் என்னும் 16 வகை தீபாராதனையும்¸ மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் மங்கல இசைக்கேற்ப ஆனந்த நடனமாடி ஆயிரங்கால் மண்டபத்தின் முன் திரளாக கூடியிருந்த பக்தர்களுக்கு நடராஜர் காட்சி அளித்தார்.
அப்போது பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தி முழுக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு சுவாமியும் அம்பாளும் திருமஞ்சன கோபுரத்தின் வழியே சென்று அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்து ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து யதாஸ்தானம் வந்தடைந்தனர்.
இந்த விழாவில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்¸ துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை¸ மணியம் செந்தில்¸ பிச்சக மிராசு ரகுராமன்¸ விஜயகுமார்¸ இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருமஞ்சன கோபுரம் வழியே சாமி வருவது ஏன்?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியேதான் மாடவீதியை வலம் வர சுவாமி சென்று வரும். ஆனால் திருமஞ்சனம் அன்று மட்டும் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியே சென்று வருவார். நடராஜர் தென்திசை கடவுள் ஆவார். உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் விதமாக அவர் திருமஞ்சன புனித நீர் கொண்டு வரப்படும் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியே சென்று மாடவீதியை வலம் வந்து மீண்டும் அதே வழியாக கோயிலுக்கு திரும்புவார்.
இந்த ஆண்டு கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சுவாமி திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி செல்லாமல் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
–செ.அருணாச்சலம்