திருவண்ணாமலை அருகே நகராட்சி டிரைவரை தாக்கி காரையும், ஐபோனையும் பறித்து சென்ற கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சஷ்டி முருகன் (வயது 27). இவர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஒட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவரது தாயார் இந்துமதி முத்துலட்சுமி ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலராக உள்ளார். சஷ்டி முருகனுக்கு சொந்தமாக மாருதி ஸ்விஃப்ட் கார் உள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் இன்ஜினியராக பணிபுரியும் சுரேந்தர் என்பவரை கடந்த 11ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இறக்கிவிட்டு சஷ்டி முருகன் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
12 ஆம் தேதி காலை 6-30 மணிக்கு திருவண்ணாமலை இருந்து மணலூர்பேட்டை செல்லும் ரோட்டில் தச்சம்பட்டு கிராம ஏரிக்கரை அருகில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சஷ்டி முருகன் காரை நிறுத்தினார். அப்போது அவரது காருக்கு முன்னால் சடார் என கார் ஒன்று வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கிய சிலர் சஷ்டி முருகன் கையில் இருந்த கார் சாவி பிடுங்க முயற்சித்தனர். சஷ்டி முருகன் தர மறுத்து அவர்களுடன் மல்லுக்கட்டுவே கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரை அடித்து விட்டு அவரிடம் இருந்த ஐபோனையும், 5 ஆயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டு சஷ்டி முருகனை இழுத்து வெளியே தள்ளி விட்டு காரை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
காயமடைந்த சஷ்டி முருகன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
திருவண்ணாமலையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் இந்த கார் திருடப்பட்டதால் அந்த கொள்ளை கும்பலை சார்ந்தவர்களின் கைவரிசையாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கார் திருட்டில் ஈடுபட்டது வேறு கும்பல் என்று தெரியவந்தது.
தொடர்ந்து தச்சம்பட்டு போலீசார் கார் திருட்டு கும்பலை தேடி வந்தனர். இந்த வழக்கில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சத்யா (22), மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த அகமது வாசிம் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
அவர்களிடமிருந்து க்யா கம்பெனி காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சஷ்டி முருகனிடமிருந்து திருடிய காருடன் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட க்யா கார், இந்த கும்பலுக்கு சொந்தமானது என்றும், இந்த காரில் இவர்கள் கும்பலாக சென்று வழிப்பறியில் ஈடுபடுவார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.