திருவண்ணாமலையில் சைவ திருமுறைகளின் கருத்தாக்கத்தை 327 மாணவிகள் பரத நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்த நாட்டிய நிகழ்ச்சி,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் உள்ள ஸ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் இந்த நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த 327 மாணவிகள் 27 நிமிடங்கள் தொடர் நாட்டியமாக சைவ சமய குரவர்கள் நால்வரின் ( திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) ஆகியோர்களின் சைவ திருமுறைகளின் கருத்தாக்கத்தை பரத நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி இராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் திரண்டு நாட்டிய நிகழ்ச்சியை ரசித்து பார்த்தனர்.
ஸ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயாவின் அதன் தலைவர் முனைவர் சங்கீதா சிவகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், வெள்ளி பதக்கம் மற்றும் கேடயத்தை இராபா உலக சாதனை புத்தகத்தின் சார்பாக அதன் துணைத் தலைவர் பரததிலகம். திலகவதி வழங்கினார்.
இந்த விழாவில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் கே.பி அசோக்குமார், திருவளிதாயம் திருநெறிய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை தலைவர் கவிஞர் நெல்லை சிவ. முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அ.கா.குமரகுருபரன், சிவ.கோ.சிவகுமார், வெங்கட் ஆகியோர் செய்து இருந்தனர்.
நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை உலகுக்கு அடையாளப்படுத்தும் சைவ திரு முறைகளை நாட்டிய அசைவுகளில் வெளிப்படுத்தும் வண்ணம் நடைபெற்ற முதல் நாட்டிய நிகழ்ச்சி இதுவாகும்.
வீடியோவை காண…