திருவண்ணாமலை போளுர் ரோட்டில் அதிமுக அலுவலகம் இருந்த இடத்தை அதிகாரிகள் அளந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா இருந்த போது அவரால் நேரடியாக நேர்காணல் நடத்தப்பட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் பெருமாள்நகர் ராஜன். இதையடுத்து அவர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை திருவண்ணாமலை போளுர் ரோட்டில் வாடகைக்கு அமைத்தார். அங்கு மீட்டிங் ஹால் மட்டுமன்றி இலவச கணினி மற்றும் தையல் பயிற்சிக்காக தனித்தனி அறைகள் கட்டப்பட்டன.
இந்நிலையில் 2016 சட்டமன்ற தேர்தலில் அவர்¸ எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் சோர்வடையாத அவர் கட்சி நிர்வாகிகளுக்கு தினமும் சாப்பாடு¸ விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோருக்கு 3 வேலையும் சாப்பாடு¸ வேட்டி¸ சேலை¸ பணம் என கொடுத்து அசத்தினார். இந்நிலையில் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகும் அவர் சாப்பாடு போடுவதையும்¸ கட்சியினரை கவுரவிப்பதையும் கைவிடவில்லை. தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம். அம்மா இல்லமாக மாறியது.
இதற்கிடையில் அதிமுகவில் உள்ள அவரது எதிர்ப்பாளர்கள் அந்த இடத்திலிருந்து அவரை காலி செய்வதற்கான வேலைகளில் இறங்கினர். இது சம்மந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மா இல்லம் இருந்த இடத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துகுமரசாமி தலைமையில் உதவி கலெக்டர் வெற்றிவேல்¸ தாசில்தார் வெங்கடேசன் மற்றும் சர்வேயர்கள் இன்று வந்து அளவீடு செய்யத் தொடங்கினர்.
அம்மா இல்லத்தில் உள்ள கடைசி ரூமில் இருந்து ஆரம்பித்து அம்மா இல்லம் பழைய நுழைவு வாயில் வரை அளந்தனர். இதையடுத்து அலுவலகம் முன்புறம் உள்ள புறம்போக்கு இடங்களை சுற்றி வேலி போட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துகுமரசாமி உத்தரவிட்டார்.
அந்த அலுவலம் அருகில் ஏழுமலை என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடு ஜே.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்டது. அப்போது ஏழுமலை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அவரது மனைவி கண்ணீர் விட்டு அழுதார். தகுதி இருப்பின ஏழுமலைக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர்.
அம்மா இல்லம் அமைந்த இடத்தை அதிகாரிகள் அளந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.