ரூ.1 கோடியே 15 லட்சம் குத்தகை பாக்கிக்காக ஆரணி லயன்ஸ் கிளப் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
12 ஆண்டுகள் குத்தகை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 4367 சதுர அடி இடம் ஆரணி லயன்ஸ் கிளப்பிற்கு வருவாய்த்துறை மூலம் குத்தகை விடப்பட்டது.
இதற்காக கடந்த 1997-ம் ஆண்டு முதல் லயன்ஸ் கிளப் 12 ஆண்டுகளுக்கு குத்தகை விடவும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ 10 லட்சத்து 1000-த்தை குத்தகை தொகையாக செலுத்துவது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாம். இந்த குத்தகை தொகை 3 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதுள்ள நில மதிப்பிற்கு ஏற்ப மாவட்ட ஆட்சித் தலைவரால் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.1 கோடியே 15 லட்சம்
அதன்படி 2015-ம் ஆண்டு வரை லயன்ஸ் கிளப் தமிழக அரசுக்கு குத்தகை தொகையான ரூ.1கோடியே 19 இலட்சத்து 34 ஆயிரத்து 105 செலுத்த வேண்டும் என்றும், இதில் 2017- ம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் லயன்ஸ் கிளப் செலுத்தி உள்ளது என்றும், நிலுவைத் தொகை ரூ.1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 105ஐ செலுத்தாமல் இருந்து வந்ததாகவும், குத்தகைத் தொகையை செலுத்தும்படி 8 முறை வருவாய் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரிமா சங்கத்தின் மூலம் பொது மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் இலவசமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுவதால் குத்தகை தொகையை செலுத்த முடியவில்லை என்பதை ஏற்று ரூ.1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 105ஐ தள்ளுபடி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று கொண்ட அரசின் கூடுதல் தலைமை செயலாளர் குத்தகையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
கோரிக்கை நிராகரிப்பு
இதையடுத்து கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம், காது, மூக்கு, தொண்டை நோய் மற்றும் பல் நோய் சம்மந்தமான முகாம், பொது சுகாதார முகாம் போன்றவைகளை இலவசமாக நடத்தி வருவதால் குத்தகை இடத்தை அரிமா சங்கத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என அரிமா சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆதரவற்றோர், முதியோர். ஊனமுற்றோர், தெரு ஓரக் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசால் இலவச நிலம் வழங்கப்படும் நிலையில் அரிமா (லயன்ஸ்) சங்கம் அத்தகைய இல்லங்களை நடத்தாததால் அரசு நிலத்தை தனிப்பட்ட சங்கத்திற்கு இலவசமாக வழங்கிட வழிவகை இல்லை என ஆரணி லயன்ஸ் சங்கத்தின் மனுவை அரசு நிராகரித்தது.
கோர்ட்டில் வழக்கு
குத்தகையை ரத்து செய்யும் அரசு உத்தரவை எதிர்த்து லயன்ஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ஜெகதீசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஆரணி லயன்ஸ் கிளப், செயல்பட்டு வந்த இடத்திற்கு சென்று அலுவலத்தை பூட்டி சீல் வைத்து வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
குத்தகை தொகை வசூலிப்பது குறித்து பிறகு பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.