முதுகெலும்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்பட சான்றிதழ்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை செங்கம் சாலை¸ மணக்குள விநாயாகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் பிரீத்தி சீனிவாசன். அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரியில் படித்தார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது 8 வயதிலேயே சீனியர் கிரிக்கெட்டில் இடம் பெற்று தனது திறமையை நிரூபித்தார். இதன் காரணமாக 16 வயதில் 19 வயதினருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் 1997ம் ஆண்டு தமிழக அணி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றது. தமிழக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெறும் முயற்சியில் பிரீத்தி சீனிவாசன் இறங்கியிருந்தார்.
இந்நிலையில்தான் பிரீத்தி சீனிவாசனின் வாழ்க்கையில் விதி விளையாடியது. பாண்டிச்சேரிக்கு கல்லூரி சுற்றுலா சென்ற போது கடற்கரையில் தண்ணீரில் இருந்த போது பெரிய அலை ஒன்றில் சிக்கி விழுந்திடாமல் இருந்திட டைவ் அடித்தார். அதன்பிறகு அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கழுத்திற்கு கீழே எந்த செயல்பாடும் இல்லாமல் இருந்தவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அழைத்து வந்தனர்.
முதுகு தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கை முடிந்து விட்டது என நினைத்த பிரீத்தி சீனிவாசனுக்கு அவரது பெற்றோர்கள் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை ஊட்டினர். 57வயதில் தந்தையும் மாரடைப்பில் இறந்து விட தாய் மட்டும் துணைக்கு இருந்து வருகிறார்.
அப்பா – அம்மா இல்லாத தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களால் எப்படி வாழ முடியும் என்ற என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்ம விடுதலை(Soul Free) என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி வீல் சேர் வழங்குவது¸ படிப்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது என தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட ஒரு மையத்தை உருவாக்கிட வேண்டும் என்பது பிரீத்தி சீனிவாசனின் கனவு திட்டமாக இருந்து வந்தது. அவரது கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை¸ செங்கம் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் அவரது தொண்டு நிறுவனம் இணைந்து முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வந்தது. இதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்¸ ‘Soul Free’ தொண்டு நிறுவனத்துடன் 03.12.2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழத்திடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்¸ இவர்கள் அடுத்தவர்களின் உதவியுடன் தான் எந்த பணிகளையும் செய்ய முடியம். இந்நிலையில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம்¸ முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கு குறுகிய காலம் தங்கும் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 8ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை¸ பிரீத்தி சீனிவாசனின் நேரில் சந்தித்து ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுத்துவதற்கான சான்றிதழ்களை வழங்கும்படி கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்த மனு மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுதவற்கு தேவையான வருவாய்த் துறையின் கட்டிட உரிமம் சான்றிதழ்¸ பொதுப் பணித் துறையின் கட்டிட நிலைத்தன்மை சான்றிதழ்¸ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சுகாதார சான்றிதழ்¸ தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையின்மை சான்றிதழ்¸ ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த சான்றிதழ்களை இன்று(11-7-2021) காலை பொதுப் பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு¸ பிரீத்தி சீனிவாசன் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். தனது கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு பிரீத்தி சீனிவாசன் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சருடன் சட்டமன்ற துணைத் தலைவர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்)¸ பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.