திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் முழு கட்டமைப்பு வசதியுடன்¸ இருதய மருத்துவ பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்று (05.07.2021) மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள்¸ சுகாதாரத் துறை அலுவலர்கள்¸ முதன்மை மருத்துவ அலுவலர்கள்¸ வட்டார மருத்துவ அலுவலர்கள்¸ மருத்துவ பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
முதலமைச்சர் அறிவுறுத்திலின்படி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 29 மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 30-வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்தவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா மூன்றாவது அலை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான 30 படுக்கைகள் அவசர பிரிவு மற்றும் 120 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி¸ பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனையில் இரண்டு இடங்களில் ‘D’ வகை ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்புடன் 380 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகம்¸ மருத்துவத் துறை¸ உள்ளாட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் 9 மடங்கு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்ள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 4000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகப்படியாக தினமும் 1.70 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்¸ தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 1.57 கோடி கொரோனா தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மூலம் கொரோனா தடுப்பூசி நடப்பு ஜீலை மாதம் 71 லட்சம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது¸ தற்போது வரை 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. மேற்கொண்டு கொரோனா தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடமிருந்து வந்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 10.4% ஆகவும்¸ வடகிழக்கு மாநிலங்களில் 15% ஆகவும்¸ தமிழகத்தில் மிகக் குறைவாக 2.5% ஆக குறைவாக உள்ளது.
திருவண்ணாமலை ஆண்மீக நகரம்¸ தமிழகம் மட்டும் அல்லாமல்¸ இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவு பொதுமக்கள் வருகை தரும் நகரம் ஆகும். திருவாரூர் மாவட்டம்¸ காட்டூர் ஊராட்சி முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்கிறது. மேலும்¸ நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோல¸ திருவண்ணாமலை நகராட்சி ஜூலை மாதம் இறுதிக்குள் 100% முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகராட்சியாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.
முதலமைச்சரின் சீரிய முயற்சியால்¸ தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 90மூ ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது¸ 75 இடங்களில் சித்தா¸ யோகா¸ யுனானி சிகிச்சை பிரிவுகள் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் கொரோனா 3-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.
பொதுப்பணித் துறை அமைச்சர்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இருதய மருத்துவ நிபுணர் நியமிக்க வலியுறுத்தி உள்ளார். விரைவில் மருத்துவர் மற்றும் முழு கட்டமைப்பு வசதியுடன்¸ இருதய மருத்துவ பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் இருதய சிகிச்சை பிரிவு தொடங்காததால் ரத்தக் குழாய் அடைப்பு¸ இருதய வால்வு பிரச்சனை¸ குழந்தைகளுக்கான இருதயப் பிரச்சனை போன்ற பல்வேறு இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். தனியார் மருத்துவமனைகளில் இருதய பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இப்பிரச்சனை குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் எடுத்துக் கூறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கடந்த 28ந் தேதி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளாச்சி குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகர வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை தெரிவித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கான வசதி இல்லை. குறிப்பாக இருதய சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகள் சிகிச்சைக்கு வெளியூருக்கு செல்லும் நிலை இருப்பதாக அரசு டாக்டர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை இன்று திருவண்ணாமலைக்கு வந்த சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்தே அவர் விரைவில் இருதய மருத்துவ பிரிவு தொடங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.