திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை யொட்டி பெண் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் கயிறு இழுக்கும் போட்டியில் கலெக்டர் மனைவியின் அணி வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி ஆகியோர் மேற்பார்வையில் அடுப்பில்லா சமையல், லெமன் ஸ்பூன், மியூசிக் சேர், தர்பூசணி பழம் சாப்பிடுதல், சைக்கிள் ஒட்டும் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, பலூன் போட்டி, கோலாட்டம் ஆகிய போட்டிகளில் நடைபெற்றன.
இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அரசு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பெண் பணியாளர்கள், சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.
பலூன் போட்டியில் மீனா, தர்பூசணி பழம் சாப்பிடுதல் போட்டியில் கிரேஸ், சைக்கிள் ஓட்டும் போட்டியில் சுதாபிரியா, மியூசிக் சேர் போட்டியில் எலிசெபத், லெமன் ஸ்பூன் போட்டியில் விஜயா ஆகியோர் வெற்றி பெற்றனர். அடுப்பில்லா சமையல் போட்டியில் 13 வகையான புட்சாலட் தயாரித்து அசத்திய ரேவதி முதல் பரிசை தட்டிச் சென்றார்.
இதே போல் கயிறு இழுக்கும் போட்டியில் கலெக்டர் முருகேஷ் மனைவி பங்கேற்ற அணி வெற்றி பெற்றது. கோலாட்டத்தில் சுதாபிரியா அணி வென்றது.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பெண்கள், உலக மகளிர் தினத்தன்று மட்டுமின்றி ஆண்டின் எல்லா நாட்களிலும் இதே மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், தனது பிறந்த நாளை முன்னிட்டும் கலெக்டர் முருகேஷ், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
விழாவை யொட்டி கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கவிதை வாசித்தல் மற்றும் பாட்டுப் போட்டியும் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சையது சுலைமான், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கந்தன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.