திருவண்ணாமலையில் குடியிருப்பு பகுதியில் ஜியோ கம்பெனியின் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பொன்னுசாமி நகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் ஜியோ கம்பெனியின் செல்போன் டவர் அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து டவர் அமைக்க மேடையும் கட்டப்பட்டது.
ஆனால் இங்கு செல்போன் டவர் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்படவே திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் செல்போன் டவர் அமைப்பதற்கான வேலைகள் மீண்டும் துவங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். டவர் அமைக்கப்படும் மேடையின் மீது அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கோஷங்கள் முழங்க ஆர்பாட்டமும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் 1 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை பொது மக்கள் விலக்கிக் கொண்டனர்.
இது சம்மந்தமாக பொன்னுசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது¸
செல்போன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு மட்டுமன்றி ஆடு¸ மாடு போன்ற விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும். நமது செல்கள் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும். 300 மீட்டர் தூரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இங்கு செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
செல்போன் டவர் அமைக்க வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகத்தில் அனுமதியும் பெறவில்லை¸ எங்களிடமும் கருத்து கேட்கப்படாமல் அராஜக போக்குடன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்ப்பை மீறி டவர் அமைத்தால் சாலை மறியல் போராட்டம்¸ கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் ஆகியவற்றை நடத்திட முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.