திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் எந்த இடத்தல் அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலை மாடவீதி மட்டுமல்லாமல் கிரிவலப்பாதையும் கான்கிரீட் சாலையாக மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (28.06.2021) திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளாச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைச்சர் எ. வ. வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில்¸ தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்)¸ எஸ். அம்பேத்குமார் (வந்தவாசி)¸ பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ ஓ. ஜோதி (செய்யாறு)¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு. பிரதாப்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ மாவட்ட வன அலுவலர் அருண்லால்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ அரசு அமைப்பு சாரா அலுவலர்கள்¸ நிறுவனங்கள்¸ அமைப்புகள்¸ தனி நபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது
திருவண்ணாமலை நகரத்திற்கு பல பெருமைகள் உள்ளது. அண்ணாந்து பார்ப்பது என்பது விண்ணைப் பார்ப்பது¸ இதில் அண்ணாவின் பெயர் இருக்கிறது. அண்ணாந்து பார்க்கும் கூம்பு வடிவத்தில் பெரிய மலையாக திகழ்வதால் அண்ணாமலை என்று அழைக்கப்பட்டு¸ அதில் திரு சேர்க்கப்பட்டு காலா காலமாக திருவண்ணாமலை என பேசப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் அண்ணா நாடு என்று ஆய்வாளர்கள் கூறிய நாட்டின் தலைநகராக திருவண்ணாமலை திகழ்ந்துள்ளது. மனிதனின் உடலில் 9 துவாரங்கள் உள்ளது¸ அது போல் திருவண்ணாமலை நகரம் வருவதற்கு 9 சாலைகள்¸ திருவண்ணாமலை கோயிலில் 9 கோபுரங்கள் உள்ளன¸ இப்படி ஒரு பொருத்தமான ஊராக திகழ்கிறது.
காப்பியத்தில் 2000 ஆண்டுகள் கி.மு. முதல் நூற்றாண்டில் மதுரை நகரம் முன்பு திருவண்ணாமலை தோன்றியதாக உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் திருவண்ணாமலை நகராட்சி உருவாக்கப்பட்டு¸ தற்போது 135 ஆண்டு பழமையான நகரமாக திகழ்கிறது. ஒரு காலத்தில் வடஆற்காடு மாவட்டத்தின் தலை நகராக சித்தூர்¸ தென் ஆற்காடு தலை நகராக கடலூர் இருந்த போது தென் ஆற்காடு பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி இருந்துள்ளது. இதனால் தான் நெடுஞ்சாலைத் துறையில் சித்தூர் கடலூர் சாலை ((CC Road)) என கூறப்பட்டு வருகிறது. இதன் பின்பு வடஆற்காடு மாவட்டத்தின் தலை நகராக வேலூர் உருவாக்கப்பட்டு அதில் திருவண்ணாமலை நகராட்சி சேர்க்கப்பட்டது.
14 கி.மீ. கிரிவலப் பாதையில் கூடுதல் குடிநீர்¸ கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும்¸ பகலில் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவில் தார் சாலையில் நடக்கும் போது கால் கொப்பளித்து விடுவதாகவும்¸ இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் வெளியூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. திருப்பதியை போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகள் கான்கிரீட் சாலையாக அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் பணியாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. திருவண்ணாமலலை 14 கி.மீ. கிரிவலப் பாதையும் கான்கிரீட் சாலையாக அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்.
திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் ஈசான்யத்தில் அமைக்கப்படும் என்பதை பலர் ஏற்கவில்லை. ஈசான்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க அப்போதைய கலெக்டர் கந்தசாமி முடிவு எடுத்தது குறித்து என்னை சட்டமன்றத்தில் பேச சொன்னார்கள். ஈசான்யத்தில் இடமும் போதுமானதாக இல்லை. புதிய பஸ் நிலையம் நகர பகுதிக்கு வெளியே இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். எனவே திருவண்ணாமலை பேருந்து நிலையம் நகரத்தின் வெளியில் வெளிவட்ட சாலையை ஒட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்க ஆட்சேபனைகளை தெரிவிக்க திருவண்ணாமலை நகராட்சி இணைய தள முகவரியை தெரிவித்திருந்தது. ஆனால் எத்தனை ஆட்சேபனை வந்திருக்கிறது என்ற விவரத்தை கடைசி வரை நகராட்சி தெரிவிக்கவில்லை.
புதிய பஸ் நிலையம் அமைக்க உள்ள ஈசான்யம்¸ பழைய பஸ் நிலையம் அருகில் உள்ளது. மேலும் அப்பகுதியில் கிரிவலப்பாதையும் அமைந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே மற்ற ஊர்களில் உள்ளது போல் பஸ் நிலையத்தை நகரை விட்டு வெளியில் அமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அப்போதைய கலெக்டர் கந்தசாமி ஈசான்யத்திலேயே அமைக்க தீவிரம் காட்டி வந்தார். இதற்காக ஈசான்யத்தில் தேங்கிக் கிடக்கும் 54ஆயிரம் டன் குப்பைகள் அரைத்து மண்ணாக்கிட ரூ.1கோடியே 25லட்சத்தில் புதியதாக நவீன ரக மிஷினை வரவழைத்து பணிகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய பஸ் நிலையம் நகரை விட்டு வெளியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்க ஒழங்கு முறை விற்பனை கூடம்¸ மருத்து கல்லூரி அருகில் உள்ள காலி இடம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மருத்து கல்லூரி அருகில் உள்ள காலி இடம் பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.