திருவண்ணாமலையில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைக்¸ செல்போன்¸ 1¸150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சகாதேவன் (வயது 57) இவர் அவலூர்பேட்டை சாலை¸ பைபாஸ் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பல்சர் பைக்கில் வந்த இரண்டு பேர் வழி மடக்கி கத்தியை கழுத்தில் வைத்து¸ அவரது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயையும்¸ செல்போனை பறித்தனர். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.
உடனே இரண்டு பேரும் கத்தியை காட்டி எவனாவது பிடிக்க வந்தால் குத்தி விடுவோம் என மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சகாதேவன்¸ திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தவகல் கிடைத்தது.
இதையடுத்து திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி தலைமையில்¸ திருவண்ணாமலை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி¸ திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்¸ திருவண்ணாமலை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பதுங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் அப்பு (21)¸ தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் பாலாஜி (எ) கவிபாலாஜி (23) ஆகியோரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம்¸ இரண்டு கத்தி¸ 500 ரூபாய் பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
திருவண்ணாமலை அடுத்த பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 31) திருவண்ணாமலை தேனிமலையில் டீ கடை வைத்திருக்கிறார். கடைக்கு செல்வதற்காக அவர் இன்று காலை 9 மணியளவில்¸ காட்டாம் பூண்டி கூட்ரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது¸ பதிவெண் இல்லாத பைக்கில் வந்த மூன்று நபர்கள்¸ அவரை வழி மடக்கி¸ கத்தியைக் காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 650 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு மட்டுமன்றி அருகில் கடையிலிருந்த¸ சோடாபாட்டிலை உடைத்து நாங்க யார் தெரியுமா¸ அருணாச்சலம்¸ சந்தோஷ்குமார்¸ ராபின்ராய்னு சொன்னா திருவண்ணாமலையே நடுங்கும் என மிரட்டி விட்டு பைக்கில் சென்று விட்டனர்.
இது குறித்து தச்சம்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது சம்மந்தமாக சீனிவாசன் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து மேல்புத்தியந்தல்¸ டாஸ்மாக் கடை அருகே இருந்த 3 பேரையும் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு மு.அண்ணாதுரை¸ வெறையூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி¸ தச்சம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை எல்.ஜி.எஸ் நகரைச் சேர்ந்த எழில் ராஜனின் மகன் அருணாச்சலம் (21)¸ கண்ணக்குருக்கை இந்திரா நகரைச் சேர்ந்த குபேந்திரனின் மகன் சந்தோஷ் குமார் (22)¸ திருவண்ணாமலை போளுர் ரோடு தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராபின்ராய் (20) ஆகிய 3 பேரிடமிருந்து இருசக்கர வாகனம்¸ இரண்டு கத்தி¸ செல்போன் மற்றும் 650 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.