திருவண்ணாமலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளித்தது. மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. இடி விழுந்து மாணவி பலியானார்.
திருவண்ணாமலையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
திருவண்ணாமலை பெரிய கடைத் தெருவில் முட்டிக்கால் அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். இதே போல் பஸ் நிலையம் போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. திடீர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களும் நனைந்து கொண்டே வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
பலத்த காற்றின் காரணமாக திருவண்ணாமலை-அவலூர்பேட்டை ரோடு கிளிப்பட்டு அருகே 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டன.
இடி மின்னலுடன் பெய்த கன மழையால் திருவண்ணாமலை அண்டம்பள்ளத்தைச் சேர்ந்த முருகனின் மகள் வினோஷா(16) தனது பாட்டி நிலத்தில் இருந்த போது இடி தாக்கி இறந்தார். இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்றும் கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.