திருவண்ணாமலையில் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தை பார்த்து பெண் சித்தர் அம்மணி அம்மாளின் வம்சாவழியினர் கண்ணீர் விட்டனர்.
குளத்தில் குதித்தார்
திருவண்ணாமலை அடுத்த செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி, தீவிர சிவன் பக்தை ஆவார். சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியால் திருமணம் செய்யாமல் இருந்தார். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முயற்சித்த போது குளத்தில் குதித்து விட்டார். கிராமத்தினர் குளத்துக்குள் மூழ்கி தேடினர் ஆனால் அருள்மொழி கிடைக்கவில்லை.
2 நாட்களுக்கு பிறகு சோகமே உருவான நிலையில் குளக்கரையில் உட்கார்ந்திருந்த பெற்றோர்கள் முன் குளத்திலிருந்து தோன்றிய அருள்மொழி, மண்ணை கைகளால் அள்ளினார். அது பிரசாதமாக மாறியது. பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கியவர் சிவபெருமான் தன்னை ஆட்கொண்டதாகவும், அம்மணி அம்மாளாக மாறி அவர் இட்ட கட்டளையை செய்து முடிக்க போகிறேன் என கூறி திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார்.
வடக்கு கோபுரம்
தனக்கு உள்ள அருளால் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து பெண் சித்தராக வாழ்ந்து வந்தார். பாதியில் நின்று போன திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற சிவபெருமானின் கட்டளை நிறைவேற்றினார். இதனால் வடக்கு கோபுரம் அம்மணி அம்மன் கோபுரம் என்றழைக்கப்பட்டது.
அந்த கோபுரத்திற்கு எதிரே மடம் அமைத்து அங்கேயே தங்கிய அம்மணி அம்மாள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்க இடமும். உணவும் அளித்தார். திருநீறு தந்து நோய்களை தீர்த்து வந்தார். 17ம் நூற்றாண்டில் அவர் ஜீவசமாதி அடைந்தார்.
தடுப்பு வேலிகள் அமைப்பு
சில தினங்களுக்கு முன்பு அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை, அந்த மடத்தையும் இடித்தது. இதற்கு இந்து அமைப்பினரும், பக்தர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பாதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த பணி கைவிடப்பட்டது.
மடத்தை இடித்தவர்கள் நாசமாக போவார்கள் என இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தி சாபம் விட்டது. மடத்தின் ஒரு பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான டி.எஸ்.சங்கர், மடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சவால் விட்டார். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்திற்குள் யாரும் நுழையாதபடி தடுப்பு வேலிகளை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அமைத்தது.
4வது தலைமுறையினர்
இந்நிலையில் சென்னசமுத்திரத்தைச் சேர்ந்த பெண் சித்தரின் 4வது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் 10 பேர் இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்து இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தை பார்த்து கண்ணீர் விட்டனர்.
அதில் 75 வயதான மூதாட்டி ஒருவரும் வந்திருந்தார். அவரது பெயரும் அம்மணி அம்மாள். பெண் சித்தர் அம்மணி அம்மாள் நினைவாக அவருக்கு அந்த பெயர் வைக்கப்பட்டதாம்.
கண்ணீர் மல்க பேட்டி
75வயது அம்மணி அம்மாள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அம்மணி அம்மாள் வழியில் வந்தவள் நாங்கள். அவர் எங்களுக்கு பாட்டி முறை வேண்டும். எங்கள் குடும்பத்தினர் இப்போது வந்திருக்கிறோம். அம்மணி அம்மாள் மடத்தை இடித்தது தவறு. நியாயம் இல்லாதது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது பரவாயில்லை. ஆனால் மடத்தை இடித்தது எந்த விதத்தில் நியாயம்?
அம்மணி அம்மாள் பல இடங்களில் பிச்சை எடுத்து எத்தனையோ இடங்களில் அவமானப்பட்டு கஷ்டப்பட்டு பெற்ற தொகையைக் கொண்டு வடக்கு கோபுரம் கட்டி எதிரிலும் மண்டபம் கட்டி அதை அன்னசத்திரமாக மாற்றி இருந்தார்.
எனவே இடிக்கப்பட்ட மண்டபத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும். அண்ணாமலையார் கோயில் 10 நாள் உற்சவத்திலும் இந்த மண்டபத்தில் பக்தர்கள் தங்கவும், சாப்பிடவும் அன்னசத்திரமாக அதை அம்மணி அம்மாள் கட்டி இருந்தார். அதை இடித்தது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர்களுடன் அகமுடையர் சங்கத் தலைவர் ந.செல்லதுரை, இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தோஷ், அகமுடையர் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், அம்மணி அம்மன் ரமேஷ், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
Watch YouTube
follow facebook page