திருவண்ணாமலையை ஆன்மீக நகரமாக அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயற்குழு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் நா.செந்தில் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது,
கையெழுத்து இயக்கம்
1) திருவண்ணாமலை நகரில் வரலாற்று சிறப்புமிக்க 17-ஆம் நூற்றாண்டு புராதன அம்மணி அம்மன் மடத்தை நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இடித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) அம்மணி அம்மன் மடத்தை நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இடித்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அராஜக போக்கினை மக்களிடமும், பக்தர்களிடமும் கொண்டு செல்ல இந்து முன்னணி சார்பில் 29ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்துவது.
ஆன்மீக நகராக அறிவிக்க வேண்டும்
3) நினைக்க முக்தி தரும் திருத்தலம், பஞ்சபூத தலத்தில் அக்னித்தலம், ஸ்ரீரமணமகரிஷி, ஸ்ரீசேக்ஷாத்திரி சுவாமிகள், ஸ்ரீவிசிறி சாமியார், யோகிகள், ஞானிகள், சித்தர்கள் வாழும் தலம், பாடல்பெற்ற திருத்தலம், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பௌர்ணமி கிரிவலம் செல்லும் தலம், திருக்கார்த்திகை பஞ்சரதம் மற்றும் தீபத்திருவிழா உற்சவம் காணும் தலம், தமிழகத்தின் 2-ஆம் இடத்தில் உள்ள ராஜகோபுரம் கொண்ட அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலை உள்ளடக்கிய இறையுணர்வுமிக்க திருவண்ணாமலை நகரை, ஆன்மீக நகரமாக அறிவிக்க வேண்டும்.
பல கோடி சொத்துக்கள்
4) திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதி சுற்றியுள்ள இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்கும் கோவில்களுக்கு சொந்தமான (மடங்களும், காலியிடங்களும்) பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியாரிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்க வேண்டும்.
5) திருவண்ணாமலை ஒன்றியம், ஆனந்தல் கிராமம் அருள்மிகு விநாயகர் கோவிலுக்கு சொந்தமான உப்புகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய்த்துறையை கேட்டுக் கொள்வது.
6) திருவண்ணாமலை ஒன்றியம், பவித்தரம்புதூர் (திருக்கோவிலூர்மெயின்ரோடு அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அவ்விடத்தில் பேருந்து நிறுத்தம் அமைந்திட வேண்டும்.
கட்டணமில்லா தரிசனம்
7) செங்கம் நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 வருடம் பழமைவாய்ந்த அருள்மிகு தர்மராஜா திரௌபதியம்மன் ஆலயத்தில் உள்ள மாற்று மதத்தினரின் கட்டிடங்களை அகற்றி சுற்றுசுவர் அமைத்திட வேண்டும்.
8) அண்ணாமலையார் ஆலயத்தின் சிறப்பு கட்டண தரிசனத்தினை நீக்கி கட்டணமில்லா தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்திட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் திருவண்ணாமலை ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கட்டுரை& செய்திகளை [email protected] -ல் அனுப்பலாம்.