Homeசெய்திகள்குழந்தை திருமணம் அதிகரிப்பு-கலெக்டர் வேதனை

குழந்தை திருமணம் அதிகரிப்பு-கலெக்டர் வேதனை

திருவண்ணாமலை:குழந்தை திருமணம்-கலெக்டர் வேதனை 

மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும்¸ குழந்தைத் திருமணம் நடைபெறுவது அதிகரித்துள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. முகூர்த்த நாட்களில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும்¸ குழந்தைத் திருமணம் நடைபெறுவது அதிகரித்துக்கொண்டே உள்ளது. 

குழந்தைத் திருமணம் செய்வதால்¸ கர்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும்¸ எடைகுறைவான குழந்தை பிறக்கவும்¸ தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இரத்த சோகை¸ உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி¸ அறிவு¸ தடைபட்டு தன்னம்பிக்கை குறைவு¸ படிப்பறிவு¸ பொது அறிவு குறைவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சினைகள்¸ கணவன்¸ மனைவி குடும்ப பிரச்சிணை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கணவன்¸ மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால்¸ இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

See also  ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல்-தி.மலை ஆசாமிகள் சிக்கினர்

பெண்ணிற்கு 18 வயதும் ஆணிற்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் – 2006 ன்படி குழந்தைத் திருமணம் என்பது குற்றம்¸ பிணை ஆணை வழங்கா குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது 1 இலட்சம்   ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் உண்டு. 

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதுபோல 21 வயது நிறைவடையாத ஆண் மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளியாவார். குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்¸ நடத்த தூண்டியவர் அனைவரும் குற்றவாளிகள். அப்பெண்குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர் மற்றும் குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்த¸ அனுமதித்த பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய எந்த நபரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். 

திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள்¸ மணமக்களின் வயதுச் சான்றை (பள்ளிச் சான்று) சரிபார்த்து¸ பெண்ணிற்கு 18 வயது மற்றும் ஆணிற்கு 21 வயது நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்த பின்னரே திருமண பத்திரிக்கை அச்சடிக்க வேண்டும். திருமண மண்டப உரிமையாளர் பெண்ணிற்கு 18 வயது மற்றும் ஆணிற்கு 21 வயது நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்த பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். திருமணத்திற்கு மந்திரம் ஒதும் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் ஆண்¸ பெண் இருவரும் திருமணத்திற்கு உரிய வயதை அடைந்தவர்களா என்பதை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை மீறி திருமணம் நடத்தி வைக்கக் கூடாது.

See also  வளர்ச்சி பணிக்கு தடை-பெண் ஊராட்சி தலைவர் அதிரடி முடிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏதேனும் பகுதிகளில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தகவல் அறிந்தால் பொதுமக்கள் அதுபற்றி உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்¸ மாவட்ட சமூகநல அலுவலகம்¸ காவல் துறை ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 

தகவல் தெரிவிப்பவரது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்படும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ பொதுமக்கள் குழந்தைத் திருமணம் நடத்துவதைத் தவிர்த்திடுமாறு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!